சுயநலம்!

பெரியவர் ஒருவர், அந்தப் பெண்ணின் அழகில் மகிழ்ந்து
அவள்தான் தன் மகனுக்கு ஏற்ற பெண் என்ற முடிவிற்கு வந்து,
அவளுடன் பேசத்துவங்குவார். அவர் அவளுடைய உறவினர்.ஆகவே
அந்த மங்கை நல்லாளும் தயக்கமின்றி அவர் கேள்விகளுக்குப் பதில்
சொல்வாள்.

தன் சட்டைப் பையில் இருந்து ஒரு ஒற்றை ரூபாய் நாணயத்தைத் தன்
விரல்களால் சுண்டி விட்டுப் பிடித்து உள்ளங் கைகளிக்கிடையே
மறைத்து வைத்துக் கொண்டு கேட்பார்:

“பூவா? தலையா? சொல்லம்மா பார்க்கலாம்?”

பெண் முகம் மலர்ந்து சொல்வாள்:

“பூ!”

அவர் தனது கைகளைத் திறந்து காட்டுவார். என்ன ஆச்சரியம்?

வந்தது பூ தான்.

உடனே பெரியவர் சொல்வார்.” வந்தது பூ; நீ தான் என்னுடைய மருமகள்!”

அந்தப் பெண் அவரை மடக்கும் விதமாகக் கேள்வி கேட்பாள்

“தலை விழுந்திருந்தால் என்ன சொல்வீர்கள்?”

“நான்தான் உனக்கு மாமனார்!”

அவருடைய சாமர்த்தியத்தைப் பாருங்கள்.

பூ விழுந்ததால் அவள்தான் மருமகள் என்றவர், தலை விழுந்திருந்தால்
நான்தான் உன்னுடைய மாமனார் என்றிருப்பாராம். எது விழுந்தாலும்
தான் தான் ஜெயிக்க வேண்டும் என்னும் தன்முனைப்பின் வெளிப்பாடு அது!

இப்படித்தான் எல்லா மனித மனமும் வெற்றி கொள்ள விழையும்

அதை இயற்கை என்று சொல்லிவிட முடியாது.

அது சுயநலம்!

மனிதனுடைய முதல் விரோதியே இந்தச் சுயநல மனப்பானைதான்

இரண்டாவது விரோதி சோம்பல்; மூன்றாவது விரோதி பய உணர்வு!

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

சரி, ஒவ்வொன்றாக வருவோம்!

சுயநலத்தை மூன்றாகப் பிரிக்கலாம்.

1. ஏதாவது வேலை என்றால், அதில் தன் பங்கு என்ன என்று தெரிந்து
கொண்டு, (what is stored in it for me?) அதைச் செய்ய ஒப்புக்
கொள்வது முதல் வகைச் சுயநலம்!

2. இரண்டாவது வகை சற்றுக்  கிறுக்குத்தனமானது!
நீ அவல் கொண்டு வா. நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும்
கலந்து வைத்துக் கொண்டு ஊதி ஊதித் தின்போம். என்னுடைய ஈடுபாடு
குறைவாக இருக்கும். உன்னுடைய ஈடுபாடு அதிகமாக இருக்க வேண்டும்
என்னும் அழிச்சாட்டியம்

3. மூன்றாவது வகை இருப்பதிலேயே மோசமானது. தலை விழுந்தால்
நான் ஜெயிப்பேன். பூ விழுந்தால் நீ தோற்பாய். அதாவது எப்படியும்
நான்தான் ஜெயிக்க வேண்டும்

இந்த மூன்று வகை ஆசாமிகளையும் நான் பார்த்திருக்கிறேன். நீங்கள்
பார்த்திருக்கிறீர்களா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்

நீங்கள் யாருடன் வேண்டுமானாலும் இணைந்து செயல் படலாம்.
ஆனால் இந்தச் சுயநலம் அதிகம் உடையவர்களுடன் இணைந்து
சில காலத்திற்கு மேற் செயல்பட முடியாது.”சீ” என்றாகி விடும்.
அவர்களைக் கண்டாலே வெறுத்து ஒதுங்கும் நிலை ஏற்பட்டுவிடும்

Post a Comment

0 Comments