மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் அருள்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. நாம் குறிப்பிடும் ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள், அந்த நாளின் அதிகாலைப் பொழுது மார்கழி! தேவர்களது பிரம்ம முகூர்த்த காலமாகிய மார்கழியில், இறைவனை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கின்றன சாஸ்திரங்கள்.

'மார்கழி' என்னும் பெயருக்கு என்ன பொருள்? 'மாரி' என்ற வார்த்தையிலிருந்து உண்டானது 'மார்' என்பது. 'மாரி' என்றால் மழை என்று பொருள். 'கழி' என்றால் 'கழிந்த' அல்லது 'பின்னர்' என்று அர்த்தம். எனவே, மழைகாலம் முடிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள்.

மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்களுக்குரிய மார்கழி நோன்பு, பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசி, சிவனுக்குரிய திருவாதிரை, மற்றும் பழையன கழியும் போகிப்பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

💚❤️மார்கழி சூன்ய மாதம் என ஏன் சொல்லப்படுகிறது? ❤️💚

மார்கழி மாதத்திற்கு சூன்ய மாதம் என்ற பெயரும் உண்டு சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.

மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்’ என்று வடமொழியில் சொல்வர். ‘மார்கம்” என்றால், வழி – “சீர்ஷம்’ என்றால், உயர்ந்த – “வழிகளுக்குள் தலைசிறந்தது’ என்பது இதன் பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. அதனால் தான் இந்த மார்கழி மாதத்தில் பாவை நோன்புற்று “உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்…’ என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், ஸ்ரீ ரங்கநாதரின் திருப்பணிகளை சரணடைந்து அவருடன் ஜோதியாய் ஐக்கியமானாள்.

🌻மார்கழி மகோத்சவம்🌻

தமிழ் மாதமாகிய மார்கழி பிறந்துவிட்டாலே நமக்கு நினைவு வருவது, ஆருத்ரா தரிசனமும், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களும் தான்.

ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரில், இந்த மார்கழி மாதத்தில் நடைபெறும் திருப்பாவைத் திருவிழா சிறப்பு வாய்ந்தது.

அதிகாலை நேரத்தில், திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்கள் ஆண்டாள் முன்பாக பாடப்படுகிறது. அதன் பிறகு காலைநேர விஸ்வரூப தரிசனம் முடிந்தவுடன், ஸ்ரீ ஆண்டாளுக்கு நடைபெறும் ஆராதனைகள் பக்தர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவை.

🌺மார்கழி நோன்பு🌺

மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். எப்படி இந்த நோன்பு ஆரம்பித்தது? ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் 'பாவை நோன்பு' என்றும் கூறப்படுகின்றது.

கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித்துதித்து வழிபட்டனர். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (கண்ணன் மீது பாடப்பட்ட பாடல்கள்) 'திருப்பாவை' யும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய 'திருவெம்பாவை'யும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை.

🌼திருப்பாவையும் , திருவெம்பாவையும்🌼

திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டது. "வாரணம் ஆயிரம்' எனத் தொடங்கும் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணப் பாடல்களை பக்தியுடன் பாடும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை வைணவப் பெரியோரிடையே உண்டு.

ஆன்மாவான உயிர் இறைவன் திருவடிகளில் சரணடைவதையே பாசுரங்கள் விளக்குகின்றன. ஆழ்வார்களில் ஆண்டாள் மற்றும் திருப்பாணாழ்வார் ஆகிய இருவர் மட்டுமே திருவடிகளில் சரணமடைந்தனர்.

ஆண்டாள் பாசுரங்களின் மகிமை தெரிந்தால் மட்டும் போதாது; பெண்கள் திருப்பாவையை தினமொருமுறை பாடினால் வைகுந்தம் போகும்வழி தானே புலப்படும்.

வைணவர் மட்டுமின்றி அனைவரும் படித்து இன்புற வேண்டியவை ஆண்டாள் அருளிய பாசுரங்கள்.

திருவெம்பாவை இருபது பாடல்களைக்கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் 'திருப்பள்ளியெழுச்சி' யிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழிமாத முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது. இப்பாடல்களில் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும், இறைவனுக்கு காலமெல்லாம் தன்னலமின்றி சேவை செய்யவேண்டும் என்பதைத் தவிர வேறு நோக்கங்கள் இல்லாமலிருப்பதையும் காணலாம்.

💠மார்கழி திருக்கோலம்💠

மார்கழி மாதம் வந்து விட்டாலே இளம் பெண்கள் வாசலை அடைத்து தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரித்து கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர், விளக்கேற்றுகின்றனர்.

பூசணிப் பூவின் மஞ்சள் நிறம், மங்கலத்தின் சின்னம்.

கோலத்தின் வெண்மை-பிரம்மன்; சாணத்தின் பசுமை-விஷ்ணு; செம்மண்ணின் செம்மை-சிவன். முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் மும்மூர்த்திகளை நினைவுபடுத்துகின்றன. மார்கழி மாதத்தில் எங்கும் பக்தி; எதிலும் தெய்வீகம் இவை அனைத்தும் இந்த மாதத்தின் சிறப்புகளாகும்.
🦉திருப்பாவை - பாடல் 1: மார்கழித் திங்கள்.!🙏

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:
திருப்பாவையின் முதல் பாசுரமான இதில், பாவை நோன்பு யாருக்காக, யாரை முன்னிட்டு, யார் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வெளியிடுகிறார் ஆண்டாள்.

செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில், இறைவனுக்கு கைங்கரியம் செய்யக்கூடிய பெருஞ் செல்வத்தைப் பெற்ற இளம் பருவத்தை உடைய பெண்களே! அழகான ஆபரணங்களை அணிந்தவர்களே! மாதங்களில் சிறந்த இந்த மார்கழி மாதத்தில் முழு நிலவு திகழும் நல்ல நாளாக இன்று நமக்கு வாய்த்திருக்கின்றது.

கூர்மையான வேல் ஆயுதம் கொண்டு, கண்ணனாகிய குழந்தைக்கு தீங்கு செய்வதற்காக வரும் அரக்கர் மீது சீறி அவர்களை அழிக்கும் கொடுந் தொழிலைப் புரிபவனான நந்தனகோபனுக்கு பிள்ளையாகப் பிறந்தவனும், அழகு நிறைந்த கண்களை உடைய யசோதைப் பிராட்டிக்கு சிங்கக் குட்டியைப் போன்று திகழ்பவனும், கருமையான மேகக் கூட்டம் போலே திரண்ட மேனி அழகு பெற்றவனும், செந்தாமரைப் பூப்போன்ற திருக் கண்களையும் சூரிய சந்திரர்களைப் போன்ற திருமுகத்தையும் உடையவனான அவனே ஸ்ரீமந் நாராயணன்.

அந்த நாராயணனே நமக்கு கைங்கரியம் என்னும் பறையைக் கொடுக்கும் நிலையில் நின்றான். அவனாலே நாம் பேறு பெற்றோம் என்ற சிறப்பைக் கொடுக்கும்படியாக நிற்கின்றான். எனவே இந்த உலகத்தினர் கொண்டாடும்படியாக இந்த நோன்பிலே ஊன்றி, நீராட விருப்பம் கொண்டவர்களாகத் திகழும் பெண்களே! வாருங்கள். வாருங்கள். என்று ஆண்டாள் தோழியரைத் துயிலெழுப்பி நோன்பு நோற்க அழைக்கிறாள்.