அத்தி

உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

அத்தி நல்ல மணத்துடன் இருந்தாலும் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். அவற்றை நீக்கி  பதப்படுத்தாமல் உண்ண முடியாது.

அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்துவெண் புள்ளிகள் மீது பூசலாம்.மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், மூலம் குணம் பெற அத்திப் பழங்கள் நல்லது.

தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.

நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு
பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.

சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.

இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும்.

வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.
மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய்,மூட்டுவலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம்.

பயன்கள்: அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

மேலும் இவை கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.

கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. 

இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.

அத்திப் பழத்தின் சத்துகள்
அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில்  ஆகியவை 100 கிராம் அத்திப் பழத்தில் அடங்கியவையாகும். 

உலர்ந்த அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.

அத்தியின் மருத்துவப் பயன்கள்

அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Anti Oxidants உள்ளன. அத்திப் பழம் அதிக போஷாக்கு அளிக்கக் கூடியது அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும்.

உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.

அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.

நீரழிவு குணமாகும்: அத்தி மரத்தை லேசாக கீறினால் பால் வடியும் இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டாலும் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். 

தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.

அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.

அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும்.நாட்டு அத்தியின் பால் மரு, மூலம் போன்றவற்றில் போட்டு வர அவை சுருங்கி விடும்.

அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். 

தென்னை, பனை போன்றவற்றில் பாளையில் பால் சுரக்கும். அத்தி வேரில் பால் சுரக்கும். தெளிந்த இந்த நீரை நாளும் 300-400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும்.

 நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.

அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

தசைப்பிடிப்பு

நாம் எல்லோருமே வாழ்வில் ஒருமுறையாவது தசைப்பிடிப்பால் அவதிப்பட்டிருப்போம். கடுமையாக வேலை செய்துகொண்டிருக்கும்போது,  விளையாடும்போது திடீரென உடலில் எங்கேயாவது தசை பிடித்துக்கொண்டு பாடாகப்படுத்திவிடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் ஒரு முக்கியப் பிரச்னை, தசைப்பிடிப்பு!

தசைப்பிடிப்பு என்றால் என்ன? 
மனிதனின் இயக்கத்துக்கு தசைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தத் தசைகள் சுருங்கி, தளரும் தன்மைகொண்டவை.  இவை,  இயற்கைக்கு மாறாக சுருங்கி வலியை ஏற்படுத்துவதைத் தசைப்பிடிப்பு என்கிறோம்.

தசைப்பிடிப்பு ஏன்?
உடலில் அதிக வறட்சியின் காரணமாக, திடீரென தசைகளில் நீர்க்குறைவு ஏற்படுவதாலும், மிகவும் சோர்வு அடையும்போது தாதுஉப்புகளின் அளவு குறைவதாலும் தசைப்பிடிப்பு ஏற்படும்.
கை, கால் போன்ற இடங்களில் அடிபடுவதாலும் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
உடற்பயிற்சி செய்யும் முன் வார்ம் அப் செய்யாவிடில், உடலில் ஏற்படும் திடீர் வெப்ப இழப்பைத் தாங்காமல் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது.
அதிகத் தூரம் பயணம் மேற்கொள்ளும்போது ஒரே நிலையில் அதிக நேரம் அமர்ந்துஇருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும்.
உடலில் உள்ள ஒரே உறுப்பை அதிக நேரம் பயன்படுத்தும்போது, தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.அடிகுழாயில் தொடர்ந்து தண்ணீர் அடிக்கும்போது, கையில் தசைப்பிடிப்பு ஏற்படலாம்.
வாழைக்காய், உருளை போன்ற வாயு நிறைந்த உணவுப் பொருட்கள், உடலில் வாயுவை அதிகரிக்கும். இதன் காரணமாகவும் தசைப்பிடிப்பு ஏற்படலாம்.
நெஞ்சு எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய அதிகக் காரம், மசாலா வகைகளை தொடர்ந்து உண்பதால், நாளடைவில் தசைப்பிடிப்பு எளிதில் ஏற்படும்.
தசைப்பிடிப்பு ஏற்படும்போது செய்யக் கூடாதவை 
நாமே கை, கால்களை முறுக்கி, தசைப்பிடிப்பை சரிசெய்ய முயற்சிக்கக் கூடாது.
தசைப்பிடிப்பு ஏற்பட்ட இடத்தில், அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்க்கக் கூடாது. அந்த இடத்தில் தசை, பலவீனம் அடைந்து இருக்கும். எனவே, அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்ப்பதால், உள் காயம் ஏற்படும்.
குளிர்ந்த நீரையோ அல்லது குளிர்பானங்களையோ அருந்தக் கூடாது.
தசைப்பிடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு அதிக வேலை கொடுக்கக் கூடாது.

தசைப்பிடிப்பு ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்? 
தசைப்பிடிப்பு ஏற்பட்டால் முதலில் ஓய்வு எடுக்க வேண்டும்.
சூடாக சுக்கு மல்லி காபி குடிக்கலாம். சுக்கு, வலியைப் போக்கும் தன்மை உடையது.
வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
நல்லெண்ணெயில் உப்பு கலந்து தேய்த்து, வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியை வேர்க்கச் செய்ய வேண்டும். குணமாகும் வரை இப்படி ஒரு நாளைக்கு இருமுறை  செய்யலாம்.
அடிபட்டு, தசைப்பிடிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தில் தசை பலவீனமாகி, ரத்த ஓட்டம் நடைபெறாமல் தடைப்பட்டு இருக்கும். எனவே, அடிபட்ட இடத்தில் எண்ணெயை ஊற்றி, மிதமாக அல்லது மெதுவாகத் தேய்துவிட வேண்டும்.
முழுமையான குணம் பெற...
கற்பூராதித் தைலம், முறிவு எண்ணெய், காயத்ரி மேனித் தைலம், நாரயணத் தைலம்  ஆகியவற்றை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம்.
தசைப்பிடிப்புக்கான ஆயுர்வேத சிகிச்சைகள் 
‘கிழிச்சல்’முறைப்படி மருத்துவக் குணமுள்ள எண்ணெயை மிதமான சூட்டில் மிதமான வேகத்தில் ஊற்ற வேண்டும். ‘வத்தி’ முறைப்படி மருத்துவக்குணமுள்ள எண்ணெயை மிதமான சூட்டில் பாத்தி போல் கட்டி, குறிப்பிட்ட நேரம் தேக்கிவைக்கும் சிகிச்சை நல்ல பலன் கொடுக்கும்.
ஆமணக்கு, நொச்சி, கல்யாணமுருங்கை, முருங்கை இலை, புங்கன் இலை, புளி இலை, எருக்கம் இலை, ஊமத்தம் இலை இதனுடன் வாதநாரயண இலை ஆகியவற்றைச் சேர்த்து, வதக்கி ஒரு துணியில் கட்டி, தினமும் இருமுறை ஒத்தடம் கொடுத்தால், தசைப்பிடிப்பு குணம் அடையும். இந்த முறைக்கு ‘பத்திரப் போட்டலி அல்லது இலைக் கிழி’ என்று பெயர்.

வழுக்கை தலையில் முடிவளர:


சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி உதிர்வது மற்றும் நரை போக்க:
1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.

4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

இயற்கை, தீர்வுகள் !!!


உயர், இரத்த அழுத்தத்திற்கான 10 

வகையான...இயற்கைதீர்வுகள் ! 

உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை, என்ற பெருவாரியாகப் பரவும் நோய், இன்றைய உலகில் வேகமாக பரவி வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் இன்றைய வாழ்க்கை முறையின் அங்கமாக திகழும் துரித உணவு, சோடா, மன அழுத்தம் இந்திய மக்களையும் கவ்வ ஆரம்பித்து விட்டது. இதன் விளைவு, மூன்றில் ஒரு இந்தியன் கூடுதல் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று சொல்கிறது கணக்கு. இந்த நோயினால் இதய நோய்கள், வாத நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் கூட தாக்க வாய்ப்புள்ளது.

இந்த நோய் குணமாக மருத்துவ துறையின் மேல் மட்டுமே நம்பிக்கை வைத்திருப்பது இனியும் நல்லதல்ல என்று அறிவுரைக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் விரைவில் குணமாகக்கூடியது அல்ல என்பதற்கு உதாரணம், மார்கெட்டில் கிடைக்கும் ஏராளமான பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், அதுவும் வித விதமாக. ஆனால் ஒரு சில இயற்கை வழியில் கிடைக்கும் பொருட்களை வைத்தே, அந்த உயர் இரத்த அழுத்த நோயை குணப்படுத்த முடியும். அவை என்னவென்று இங்கே காணலாமா?

பூண்டு

இரத்த அழுத்தம் லேசாக இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு பூண்டு நல்ல மருந்து. அதிலும் பூண்டிலுள்ள அல்லிசின், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு கூடுவதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக இரத்த குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால், இதய விரிவாக்கம் மற்றும் இதயச் சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.
 
கற்பூரவள்ளி

ஆய்வு அறிக்கையின்படி, கற்பூரவள்ளி இரத்தக் குழாய்களின் மெல்லிழைவான தசைகளை ஓய்வெடுக்க வைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் இது இதய துடிப்புகளை வலிமைப்படுத்தி, அழுத்தத்தின் வேகத்தை குறைக்க உதவுகிறது.

முருங்கைக் காய்.

முருங்கைக்காயில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் பெருமதிப்பு வாய்ந்த வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் போன்றவை நிறைந்துள்ளது. ஆய்வின் படி முருங்கை செடியின் இலைகளிலிருந்து எடுக்கும் சாற்றால், இதயம் விரியும் போது மற்றும் சுருங்கும் போது ஏற்படும் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு உண்டு என்று கூறுகிறது. இதன் பயனை அடைவதற்கு, முருங்கைக் காயை பருப்பு வகைகளோடு சமைத்து உண்ண வேண்டும்.
 
நெல்லிக்காய்

நெல்லிக்காயும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இரத்தக் குழாய்களை அகலப்படுத்த முக்கிய பங்கு வகிப்பதால், இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.

முள்ளங்கி

இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தும் காய்கறியில் முள்ளங்கியும் ஒன்று. அப்படிப்பட்ட முள்ளங்கியில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்ற பொருட்கள் இருக்கின்றன. அதுவும் பொட்டாசியம் அதிகமுள்ள முள்ளங்கி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
 
எள்

சமீபத்திய ஆய்வின் படி நல்லெண்ணெய் மற்றும் அரிசி தவிட்டு எண்ணெய் கலந்த பண்டங்களை சாப்பிடுவதால், உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்தம் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் மருந்துகள் சாப்பிடுவதை விட, இதை உபயோகித்தல் இன்னும் நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஆய்வு சொல்கிறது.
 
ஆளி விதை

ஆளி விதையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் கொண்டுள்ள லினோலினிக் அமிலத்தின் கூட்டு வளமாக இருக்கிறது. பல ஆய்வுகளின் படி, ஆளி விதை சேர்த்த உணவை உட்கொண்டால், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் குறைந்த அளவிலேயே இருக்கும். மேலும் இரத்த அழுத்தத்தையும் இது குறைக்க உதவும்.

ஏலக்காய்

உயிர் வேதியியல் மற்றும் உயிர் இயற்பியலின் இந்திய குறிப்பேட்டின் ஆய்வறிக்கையின்படி, உயர் இரத்த அழுத்தம் உள்ள 20 நபர்களுக்கு தினமும் 3 கிராம் ஏலக்காய்ப் பொடி கொடுக்கப்பட்டது. மூன்று மாத முடிவில் அனைவருக்கும் பக்க விளைவு எதுவுமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் தேறினார்கள். மேலும் இரத்த அழுத்தமும் நன்றாக குறைந்து காணப்பட்டது.

வெங்காயம்

வெங்காயத்தில் குவர்செட்டின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால், அவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய் மற்றும் வாதத்திலிருந்து காப்பாற்றும்.
 
லவங்கப்பட்டை

லவங்கப்பட்டை இதய நோய்கள் தவிர சர்க்கரை நோயையும் தடுக்கும். ஓஹியோவிலுள்ள செயல்முறை உடல் நலம் அறிவியல் மையம் நடத்திய ஆய்வின்படி, 22 நபர்களில் 11 பேருக்கு தினமும் தண்ணீரில் லவங்கப்பட்டை பொடி 250 மி.கி. அளவில் கொடுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஆறுதல் மருந்து மட்டுமே அளிக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் லவங்கப்பட்டை கலந்த தண்ணீர் அருந்தியவர்களுக்கு 13 முதல் 23 விழுக்காடு வரை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவு கூடியது. மேலும் உயர் இரத்த அழுத்தமும் நன்றாக குறைந்து காணப்பட்டது.

கடமையா? வாய்மையா?பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும் ஓர் ஆண்டு காந்துறையும் அஞ்ஞாத வாசமும் முடித்துக் கொண்டு வெளிப்பட்டனர்.

துரியோதனன் சொன்னபடி நாடுதர மறுத்துவிட்டமையால், போர் தடுக்க முடியாததாகி விட்டது.

இருதரப்பினரும் போருக்குப் படை திரட்டலாயினர். பாண்டவர் உயலாவியம் என்னுமிடத்திலிருந்து படை திரட்டினர்.

பாண்டவர் தந்தை பாண்டு மன்னனுக்கு இரு மனைவியர். மூத்தவள் குந்தி. அவளுக்குத் தர்மன், வீமன், அர்ச்சுனன் என மூவர் புதல்வர். இரண்டாம் மனைவி மாத்திரி. அவளுக்கு நகுலன், சகாதேவன் என இரு புதல்வர்.

மாத்திரியின் உடன் பிறந்தவன் சல்லியன். அவன் பேராற்றல் படைத்தவன். வில்லாண்மையாலும் வாளாண்மையாலும் வேலாண்மையாலும் அவனை யாரும் வெல்ல இயலாது.

அந்தச் சல்லியன், தன் மருமக்களுக்கு உதவுவதற்காக உபலாவியம் நோக்கித் தன் பெரும்படைகளுடன் வந்து கொண்டிருந்தான்.

இச்செய்தி அறிந்த துரியோதனன், எப்படியாவது சல்லியனைத் தனக்கு உதவியாக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்று எண்ணினான்.

சல்லியன் நெடுந்தூரம் வந்தமையால், அவனும் அவன் படைகளும் சோர்ந்து போயினர். நடுவில் பெரிய பாலை நிலம் குறுக்கிவிடது. ஒரே வெய்யில் வெப்பக்காற்று வேறு புழுதிப்புயல் கண்ணை மறைத்தது.

படைவீரர் தாகத்தாலும் பசியரலும் துடிக்கலாயினர். நா உலர்ந்து நடைதளர்ந்தனர். நிழலே அருகில் தென்படவில்லை.தன் படைகள் சோர்ந்து போவது கண்டு, சல்லியன் வேதனையுற்றான். இன்னும் பாலை எவ்வளவு தூரம் உள்ளதென்றே தெரியவில்லை.

எப்படியோ மேலும் சிறிது தூரம் முன்னேறினான். என்ன அதிசயம் வழியில் ஒரு பெரிய பந்தல் தென்பட்டது. அளவு கடந்த தன் படைகளுடன் தங்குவதற்கு ஏற்றபடி விசாலமாக அந்தப் பந்தல் இருந்தது. சிலர் வந்து சல்லியனையும் அவன் படைவீரரையும் முகமன் கூறிப் பந்தலுக்குள் அழைத்துச் சென்றனர்.

முதலில் தாகத்துக்கு இளநீரும், மோரும் தந்தனர். யானைகளுக்கும் குதிரைகளுக்கும் தண்ணீரும் கரும்பும் அறுகம் புல்லும் குவிக்கப்பட்டிருந்தன.

சற்றுநேரத்தில் அறுசுவையுண்டி பரிமாறப்பட்டன. அனைவரும் உணவருந்திக் குளிர் நிழலில் இளைப்பாறினர்.

நடுப்பாலையிலே நண்பகலிலே கிடைத்த விருந்து உபசாரம் கண்ட சல்லியன் வியப்பாலும் மகிழ்வாலும் பரவசமானான்.

இத்தகைய அறச்செயலைக் காலத்தினால் செய்த அறவோன் யார்? அவன் எதன் பொருட்டு இந்த அறச்செயலை மேற் கொண்டான்? என்று சல்லியன் சிந்தனையில் ஆழ்ந்தான். அந்த அறவோளை அவன் மனமும் வாயும், வாழ்த்திக் கொண்டே இருந்தது.

“இந்த அறச்செயல் செய்த அறவோனுக்கு என் உடல், பொருள். ஆவி அனைத்தும் உதவினாலும் கைம்மாறு ஆகாது!” என்று அவன் வாய் அவனை அறியாமல் உரக்கக் கூறிவிட்டது.

உடனே அதுகாறும் மறைந்திருந்த துரியோதனன், சல்லி யனுக்கு முன்னே நின்றான்.

“மாமா! தங்கள் மருமகனாகிய நானே தங்களை உபசரிக்கும் இப்பேறு பெற்றேன். தாங்கள் தங்கள் உடல், பொருள், ஆவியும் எனக்கே தருவேன் என்றீர்கள் அல்லவா? 

வரப்போகும் போரில் எனக்குத் துணையாக நின்றால், அந்த உதவியே போதும். அதுவே நான் எதிர்பார்க்கும் கைம்மாறு” என்றான் துரியோதனன்.

விருந்துண்ட மகிழ்ச்சியில் தன்னை மறந்து கூறிய சொல், சல்லியனது கடமைக்கு மாறாக அமைந்துவிட்டதே!

மருமக்களுக்கு உதவுவதே மாமன் கடமை. இப்போது அக்கடமையைச் செய்ய முடியாமல், தன் வாய்மை தடுத்துவிட்டதே

கடமையா வாய்மையா என்ற பட்டிமண்டபம் நெடுநேரம் சல்லியன் மனத்தில் நிகழ்ந்தது. வாய்மையே பெரிது என்று அவன் மனம் தீர்ப்பளித்து விட்டது.

தன் பெரும் படையுடன் துரியோதனனுக்குப் போரில் உதவி செய்ய அத்தினபுரம் நோக்கிப் புறப்பட்டு விட்டான். போரில் துரியோதனனுக்காகவே தன் உயிரையும் கொடுத்தான்.

சல்லியன் வாய்மை காத்த செயல்கண்டு உலகமே போற்றியது. மருமகன் தருமன் முதலியோரும் தங்களுக்கு எதிராகப் போரிட்ட அவனை வெறுக்கவில்லை அவளைக் கொண்டாடவே செய்தனர். இந்த வரலாறு ஒரே செய்யுளில் வில்லிபுத்தூரார் சுருக்கமாகக் காட்டியுள்ளார்.

"இடைப்படு நெறியில் வைகும்
     இவனது வரவு கேட்டுத் 
தொடைப்படு தும்பை மாலைச் 
     சுயோதனன் சூழ்ச்சி யாக 
மடைப்படு விதியிற் செய்த
     விருந்தினால் மருண்டு, அவற்கே 
படைப்படு சேனை யோடும்
     படைத்துணை ஆயி னானே"
என்பதே அப்பாடல்.

‘கறிவேப்பிலையும் கடுகும்

திருவனந்தபுரம் - கேரளா யுனிவெர்சிட்டியில் ... ‘கறிவேப்பிலையும் கடுகும் தாளிக்கப் பயன்படுத்துவதால் என்ன பயன் ?’ என்பது குறித்து மருத்துவக் குழுவினரால் ஆராயப்பட்டது.

இந்த இரண்டும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரியவந்தது. மேலும் ஃப்ரீரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது
.ஃபிரீரேடிக்கல்ஸ் உருவாவதால் தான் டி.என்.ஏ பாதிக்கிறது.
செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. 
விளைவு கேன்சர், வாத நோய்கள் தோன்றுகின்றன.

தாளிதம் செய்யும் போது சேர்க்கப்படும் கடுகும் கறிவேப்பிலையும் Free radicals ஃபிரீரேடிக்கல்ஸ் உருவாவதைத் தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

[கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். 
இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும்.]
-Dr.S.வெங்கடாசலம்

மனசுலே....


நாகர்கோவிலிலிருந்து மெளன்டன்வியூ வந்து இன்றைக்கு இரண்டு மாதமாகிறது. ஆனால், இருபது வருடங்கள் ஆனதுபோல் மன இறுக்கம். அறுபதே நாளில் எப்படித் தலைகீழாக என் வாழ்க்கை மாறிவிட்டது?

பிறந்தது முதல் அறுபத்தைந்து வருடங்கள் நாகர்கோவில் ஒழுகினசேரி கிராமத்தில். காலை எழுந்திருப்பது, பழையாற்றில் குளியல், சேது லட்சுமிபாய் பள்ளிக்கூடத்தில் படிப்பு, லாலாக்கடை அல்வா, சங்கர அய்யர் ஹோட்டல் ரசவடை, லட்சுமி தியேட்டர் தரை டிக்கெட் சினிமா என்று சிறுவயது வாழ்க்கை. அப்புறம் மணிமேடை ஜங்ஷனில் இருக்கும் போஸ்ட் ஆஃபீசில் கிளார்க் வேலை. மாமா மகள் சரோஜாவோடு கல்யாணம். கறிவேப்பிலைக் கொழுந்தாக மகன் மணி. படிப்பில் படு சுட்டி. சென்னை ஐ.ஐ.டி.யில் எஞ்சினீயரிங் படித்தான். அமெரிக்காவில் மேற்படிப்பு. அங்கேயே தங்கிவிட்டான். தங்கமான பையன். நாங்கள் பார்த்துவைத்த தூரத்து சொந்தக்காரப் பெண் கலாவோடு திருமணம். இரண்டு பேரும் கூகிள் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். ஆதித் என்று நான்கு வயது மகன், இரண்டு வயது மகள் ஆத்யா. இருவரும் டே கேர் போகிறார்கள். 

மணி குடும்பத்தோடு வருடாவருடம் எங்களைப் பார்க்க வருவான். ஒவ்வொரு தடவையும், அவனும், கலாவும் அமெரிக்காவுக்கு வரும்படி சொல்லுவார்கள். சரோஜா அழகாகப் பதில் சொல்லுவாள், "நீங்க செடியாக இருக்கறப்ப அமெரிக்கா போய்ட்டீங்க. அங்கே வேரூன்ற முடிஞ்சுது. நாங்க மரம்டா, அறுபது வயசு மரம். எங்களைப் பிடுங்கி நடாதே. இந்த ஊரைவிட்டு எங்களால் வரவே முடியாது." 

மகராசி, சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற அவளால் முடிந்தது. இந்த வருஷம், அவளுக்கு அறுபது வயசுப் பிறந்த நாள். நாகராஜா கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டுத் திரும்பினோம். அசதியாக இருக்கிறது என்று படுத்தாள். நெஞ்சு வலித்தது. என் மடியில் படுத்துக்கொண்டே போய்விட்டாள். "நாம் யாருக்குமே கெடுதல் நெனைச்சது கிடையாது. அதனால், நமக்கு அநாயச மரணம்தான் வரும் உங்களுக்கு அப்புறம்தான் நான் போகணும். ஏன் தெரியுமா? காப்பிகூட உங்களுக்குப் போடத் தெரியாது, திண்டாடித் திணறிடுவீங்க" என்று அடிக்கடி சொல்லுவாள். அவள் பாதிப் பிரார்த்தனை பலித்துவிட்டது. அநாயசமாகப் போய்விட்டாள். நான் மாட்டிக்கொண்டேன். 

மணி வந்தான். காரியங்கள் முடிந்தன. 

"அப்பா, நீங்க எங்களோட அமெரிக்கா வர்றீங்க." 

"நான் பக்கத்துத் திருவனந்தபுரம் தவிர, தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கேயும் போனதே கிடையாதே? எப்படிடா வருவேன்? என்னை விட்டுடு." 

"உங்களைத் தனியா விட்டுப் போகமாட்டேன். நீங்க வந்தே ஆகணும்." 

"ரெண்டு நாள் தா. ஆலோசிச்சுச் சொல்றேன்." 

பால்ய சிநேகிதன் ஹரியோடு பேசினேன். அவன் சொன்னான், "நம்ம ஊர்ல என்னடா இருக்கு? நம்ம வயசுக்காரங்கள்லே நாமும், சாமிநாதனும்தான் மிச்சம். இந்தக் காலத்துல பசங்க அப்பா, அம்மாவை வெச்சுக் காப்பாத்தறதே ஆச்சரியம். உனக்கு, மகன், மருமகள் ரெண்டு பேருமே பிரியமாக் கூப்பிடறாங்க. தயங்காமப் போயிடு." 

மணிக்கும், கலாவுக்கும் ஒரே சந்தோஷம். "யூ ஆர் கமிங் வித் அஸ் தாத்தா" என்று ஆதித் கட்டிக்கொண்டான். என்னவென்றே புரியாமல் குழந்தை ஆத்யாவும் Huggy தந்தாள். 

ஆமாம், அறுபத்து ஐந்து வயது மரம், தன் வேர்களைப் பெயர்த்துக்கொண்டு அமெரிக்காவில் வேரூன்ற முடிவெடுத்துவிட்டது. ஹரி, பழையாறு, நாகராஜா கோவில், மணிமேடை ஜங்ஷன் எல்லாத்துக்கும் டாட்டா சொன்னேன். நாகர்கோவிலுக்குத் திரும்பிவருவேன் என்று எனக்கு நம்பிக்கையில்லை. 

அமெரிக்கா வந்துவிட்டேன். மணியும், கலாவும் எனக்காக லீவு எடுத்திருந்தார்கள். ஆதித், ஆத்யா டே கேர் போகவில்லை. நாள் முழுக்க அரட்டை, குழந்தைகளோடு விளையாட்டு. பெரிய வீடு. சுற்றிலும், சிகப்பு, வெள்ளை, மஞ்சள் எனப் பூத்துக் குலுங்கும் ரோஜாக்கள். ஒவ்வொரு பூவும் பெரிசு பெரிசாய்… நாகர்கோவில் கலைவாணர் பூங்காவில்கூட இத்தனை தினுசு இத்தனை பெரிசு கிடையாது. வீட்டின் பின்புறம், பிள்ளைத்தாய்ச்சி போல் ஆரஞ்சு, ஆப்பிள் மரங்கள். ரோஜாக்களைத் தொட்டுத் தடவுவேன். ஆப்பிளை மரத்திலிருந்து பறித்துச் சாப்பிடுவேன். அனுபவம் புதுமை. அமெரிக்கா சொர்க்கமாக இருந்தது. 

இரண்டு வாரங்கள் ஓடின. மணி சொன்னான், "அப்பா, நாளை முதல் நானும், கலாவும் ஆபீஸ் போகணும். ஆதித், ஆத்யாவுக்கும் கிரெஷ் ஸ்டார்ட்டிங்." 

மறுநாள் காலை. ஆறு மணிக்கே வீடு அல்லோல கல்லோலப்பட்டது. பச்சைக் குழந்தைகளை அரைத் தூக்கத்தில் எழுப்பினார்கள். ஏழரை மணிக்கு எல்லோரும் ரெடி. காலையில் மணி குழந்தைகளை டே கேரில் விடுவானாம், மாலை ஆறு மணிக்குக் கலா கூட்டிக்கொண்டு வருவாளாம். இப்படிப் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளும் ஏற்பாடு.

புறப்படும்போது மணி சொன்னான், "அப்பா, இந்த ஏரியா பத்திரமானதுதான். ஆனால், நாம் ஜாக்கிரதையா இருக்கணும்." 

"அப்படீன்னா…!" 

"யாராவது கதவைத் தட்டினா திறக்காதீங்க. நான் சன் டிவி, ஜெயா டிவி, ஹீரோ டாக்கீஸ் கனெக்‌ஷன் எல்லாம் வாங்கியிருக்கேன்." 

எப்படி டி.வி. போடுவது, சினிமா பார்ப்பது என்றெல்லாம் விளக்கினான். கொஞ்ச நேரத்தில் எல்லோரும் போய்விட்டார்கள். நான் மட்டும் தனியாய். ஒரே நிசப்தம். என்னை அறியாமலே மனம்முழுக்கப் பயம். வாழ்க்கையில் இத்தனை நிசப்தத்தை நான் அனுபவித்ததே கிடையாது. ஒழுகினசேரியில், குழந்தைகள் விளையாட்டு, அக்கம் பக்கப் பெண்களின் அரட்டை, ஆண்களின் அரசியல் விவாதங்கள், டிவி அலறல் என்று கிராமமே அதிரும். ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். ரோட்டில் கார்கள்கூட அதிகம் காணவில்லை. மனிதர்களே இல்லாத அத்துவானக் காட்டில் என்னை யாரோ விட்டுப்போனதுபோல் வெறுமை. 

வயிறு பசித்தது. டேபிள்மேல் காலைக்கு இட்டிலி, மதிய உணவு, ஃபிளாஸ்க் நிறையக் காப்பி. மருமகள் கலா அன்போடு சமைத்துவைத்துப் போயிருந்தாள். எனக்கு ஒரு குணம். தானாகவே எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடுவது நான் வெறுக்கும் சமாச்சாரம். இதற்கு முக்கிய காரணம் என் தர்மபத்தினி சரோஜாதான். கல்யாணம் ஆகும்வரை அம்மா பரிமாறுவாள். அப்புறம் அத்தனை நாளும் சரோஜாதான். சில கல்யாணங்களில் பஃபே விருந்து இருக்கும். அங்கேயெல்லாம் சரோஜாவே தட்டில் போட்டு எனக்குத் தந்துவிடுவாள். 

இட்டிலி சாப்பிடத் தொடங்கினேன். நானே எடுத்துச் சாப்பிடும்போது, ஒவ்வொரு விள்ளலும் தொண்டைக்குக் கீழ் இறங்க மறுத்தது. டிவி போட்டேன். அதுவும் போரடித்தது. படுத்தேன். என்னை அறியாமலே தூங்கிவிட்டேன். மதியம். கடனே என்று சாப்பாடு. 

சாயந்தரம் வந்த கலா பதறிவிட்டாள்.

"மாமா, நீங்க சாப்பிடவேயில்லையே? உப்பு, காரம் ஏதாவது அதிகமாகப் போட்டுட்டேனா? உங்க உடம்பு சரியா இருக்கில்ல?" 

"இல்லம்மா. உன் சமையல் சூப்பர். என் உடம்பும் நல்லாத்தான் இருக்குது. ஏதோ ஊர் நினைப்பு." 

கலா அப்புறம் மணியோடு வந்து பேசினாள். 

"உங்களுக்கு போரடிக்குதுன்னு நினைக்கிறேன். ஸில்வன் பார்க் பக்கத்தில்தான் இருக்குது. நடக்கிற தூரம்தான். இந்தச் சனி, ஞாயிறு உங்களைக் கூட்டிட்டுப் போய்க் காட்டறேன். நீங்க தினமும் சாயந்தரம் போகலாம்." 

சனி, ஞாயிறு போனேன். நிறைய இந்தியக் குடும்பங்கள். ஆதித், ஆத்யாவோடு பந்தைத் தூக்கிப்போட்டு விளையாடினேன். ஜாலியான நேரங்கள். 

தினமும் ஸில்வன் பார்க் போகத் தொடங்கினேன். ஒரே ஒரு பிரச்சனை. வீட்டைப் பூட்டினோமா என்று சந்தேகம். இழுத்து, இழுத்துப் பார்ப்பேன். சாவியைப் பத்திரமாக வைத்துக்கொண்டிருக்கிறோமா என்று மனசு வேகமாக லப், டப் அடிக்கும். அடிக்கடி சட்டைப் பாக்கெட்டைச் செக் பண்ணிக்கொள்வேன். சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் டென்ஷன், டென்ஷன். 

அமெரிக்காவில் காலெடுத்து வைத்தாலே வாழ்க்கை எந்திரகதி ஆகிவிடும் போலிருக்கிறது. திங்கள் டு வெள்ளி டிவி, ஸில்வன் பார்க்: சனி, ஞாயிறு சன்னிவேல் கோவில், காஸ்ட்கோ போய் மளிகைச் சாமான்கள், நம்மூர் ஹோட்டலில் சாப்பாடு. 

இரண்டு மாதத்தில் அமெரிக்கா வெறுத்துவிட்டது. அதிலும், ஸில்வன் பார்க்கில் பெரும்பாலும் வருபவர்கள் இந்தி, தெலுங்குக்காரர்கள். ஆங்கிலம் தெரிந்தாலும், இந்தி, தெலுங்கு பேசினார்கள். எனக்கு இரண்டுமே சுட்டுப்போட்டாலும் புரியாது, வராது. ஒரு வயதான தமிழ்த் தம்பதியைப் பார்த்தேன். சிரித்தேன். பதிலுக்குச் சிரித்தார்கள். ஹலோ சொன்னேன். ஹலோ சொன்னார்கள். அப்புறம், நான் பக்கத்தில் நிற்பதையே மறந்துவிட்டு, அவர்களுக்குள் பேசத் தொடங்கினார்கள். நான் நகர்ந்தேன்.
பார்க் கிரவுண்டில் நான் போகும்போதெல்லாம் சின்னப் பையன்கள் ஸாக்கர் விளையாடுகிறார்கள். அதைப் பார்ப்பதுதான் என் பொழுதுபோக்கு. அதேநேரம், மனக்குரங்கு எங்கெங்கோ அலைபாயும். வேலை வெட்டி இல்லாத மூளை சாத்தானின் கூடாரமாகும். அமெரிக்கா வந்ததே தப்போ, நாகர்கோவிலிலேயே இருந்திருக்கலாமோ, மணியும், கலாவும் என்னைக் கூட்டிக்கொண்டு வந்தது உண்மையாகவே என்மீது இருக்கும் பாசத்தாலா, அல்லது ஆதித், ஆத்யாவுக்கு விளையாட்டுப் பொம்மையாகவா? இப்படி நினைத்த சில நிமிடங்களிலேயே, இப்படிக் கீழ்த்தரமாகச் சிந்திக்கிறோமே என்று என்னையே திட்டிக்கொள்வேன். 

ஒரு வாரமாக ஒரு புதுப்பையன் வருகிறான். ஒன்பது, பத்து வயசு இருக்கலாம். பளிச் முகம். சூம்பிப்போன கால்கள். போலியோ பாதிப்பு. ஊன்றுகோல்களோடு மெள்ள நடந்து வருவான். உடையைப் பார்த்தால், அதிகம் வசதி உள்ளவனாகத் தெரியவில்லை. ஸாக்கர் மைதானம் அருகே ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருப்பான். தன்னால் விளையாட முடியவில்லையே என்னும் சோகம் அவனுக்குள் நிச்சயம் இருக்கவேண்டும். அடிக்கடி என்னைத் திரும்பிப் பார்ப்பான். ஆனால், ஏதோ தயக்கம் தெரியும். என்னிடம் பண உதவி எதிர்பார்க்கிறானோ? எதற்கும், கவனமாக இருப்பது நல்லது. 

இன்று அந்தப் பையன் என்னருகே வந்தான். 

"தாத்தா, நீங்க தமிழா?" 

"ஆமாம். ஏன்? நீ தமிழா?"

"ஆமாம். நான் உங்க பக்கத்திலே உட்காரலாமா? உங்ககூடக் கொஞ்சம் பேசணும்." 

என் மனக்குறளி சொன்னது, "இந்தப் பயல் டாலர்தான் கேட்கப் போறான்." 

"தாத்தா, என் பேரு கண்ணன். எங்க ஊரு தர்மபுரி." 

"சேலம் பக்கத்தில் இருக்கிற ஊர்தானே?"

"ஆமாம். எங்க அப்பா ரொம்பக் குடிப்பாரு. என் மூணு வயசுலேயே இறந்து போயிட்டாரு. அம்மாதான் என்னை வளத்தாங்க. போன வருஷம், ஒரு கார் விபத்தில் அவங்க உயிர் போயிடிச்சு. ராமகிருஷ்ண மடம் சாமிகள் என்னைக் கூட்டிட்டுப் போய்ப் படிக்கவெச்சாங்க. அங்கே சாமிக்குத் தெரிஞ்ச ஒரு அம்மா வந்தாங்க. அரசாங்க அனுமதி வாங்கி என்னைக் கூட்டிட்டு வந்திருக்காங்க. நல்லாப் பாத்துக்கறாங்க. வீட்டிலே இங்கிலீஷ் சொல்லித் தர்றாங்க. சீக்கிரமே ஸ்கூல்லே சேப்பாங்க. நான் நல்லாப் படிச்சுப் பெரிய ஆளா வருவேன்." 

"ஆசீர்வாதம் தம்பி."

"நன்றி தாத்தா. எனக்கு உங்ககிட்டே ஒண்ணு கேக்கணும். தப்பா நினைக்க மாட்டிங்களே?" 

ஒருவழியாப் பயல் பணந்தான் கேட்கப் போறான்.

"சொல்லுப்பா."

"நீங்க எப்பவும் ஏன் சோகமா உட்கார்ந்திருக்கீங்க?"

"ஏதோ நெனைப்புகள் தம்பி."

"தாத்தா. நான் அநாதை. கால் நடக்கமுடியாது. ஆனால், ராமகிருஷ்ண மடம் சாமியார் என்னைக் கிராமத்திலிருந்து கூட்டிட்டுப் போனது என் அதிர்ஷ்டம். சாந்தி அம்மா அமெரிக்காவுக்கு அழைச்சு வந்தது என் அதிர்ஷ்டம். இதை நெனச்சு, நெனச்சு, நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?" 

"நெஜமாவா? எப்படிடா?"

அந்தப் பொடியன் என் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான். அவனை, என்னிடம் காசுக்குக் கையேந்தி வருகிறவனா நெனைச்ச நானெல்லாம் ஒரு மனுஷனா! 

"ராமகிருஷ்ண மடம் சுவாமிஜி எனக்கு ஒரு கதை சொன்னார். மனசுலே வருத்தம் வர்றப்போ எல்லாம், அந்தக் கதையை நினைவுபடுத்திக்கச் சொன்னார்." 

"என்னப்பா கதை அது?" 

"ரொம்ப நாள் முன்னாடி, ஒரு ராஜா இருந்தார். அவருக்குத் தீராத தலைவலி. வைத்தியர்கள் வகை வகையா மருந்து கொடுத்தும் குணமாகலே. ஒரு ஜோசியர் வந்தார். ராஜா பச்சை நிறத்தை மட்டும் பாத்துக்கிட்டேயிருந்தா தலைவலி போயிடும்ன்னு சொன்னார். நாடு முழுக்கப் பச்சைப் பெயிண்ட் அடிச்சாங்க. நாட்டில் எல்லோரும் பச்சை டிரெஸ் மட்டுமே போடலாம்னு கட்டளையிட்டாங்க. ஆனா, குதிரை யானை, வானம் நிறங்களை மாற்ற முடியுமா? இவற்றை ராஜா சிலசமயம் பார்த்துவிடுவார். தலைவலியால் துடிப்பார். ராஜாவுக்குத் தெனாலிராமன் மாதிரி ஒரு விகடகவி. ஒரு சுலபவழி சொன்னார், நீங்க பச்சைநிறக் கண்ணாடி அணியுங்க. அப்புறம் நீங்க எதைப் பாத்தாலும், தலைவலி வராது. ராஜா அதைப் பின்பற்றினார். அவர் தலைவலி போயே போச்." 

நான் பிரமிப்பில். சந்தோஷம் வெளியில் இருந்து வருவதில்லை. நமக்குள்தான் இருக்கிறது. நம் அணுகுமுறையை மாற்றிக்கொண்டால், இனியெல்லாம் சுகமே என்னும் தத்துவம் இந்தக் குட்டிக்கதைக்குள்ளா? 

"தாத்தா. லேட் ஆகுது. சாந்தி அம்மா தேடுவாங்க. வீட்டுக்குப் போறேன். நாளைக்குக் கட்டாயம் உங்க கதையைச் சொல்லுங்க."

ஊன்றுகோல்களின் டொக் டொக் சப்தம். திரும்பிப் பார்த்துக்கொண்டே போகிறான். எனக்குள் பிரம்மாண்டக் கேள்வி - இவன், வெறும் தர்மபுரிக் கண்ணனா, அல்லது கீதோபதேசக்காரரின் மறுபிறவியா? 

வீட்டுக்கு வருகிறேன். என் நடையில் என்னை அறியாமலே, ஒரு துள்ளல். மணி வந்தவுடன், கலா அவனிடம் மெள்ளச் சொல்கிறாள், "ரொம்ப நாளைக்கு அப்புறம், மாமா இன்றைக்குச் சந்தோஷமா இருக்கார்."

நான் மகனிடம் போகிறேன். 

"மணி, பொழுதை வீணாக் கழிக்க எனக்குப் பிடிக்கலே. எங்கேயாவது பார்ட் டைம் வாலன்டியரா ஒர்க் பண்ண முடியுமா?" 

"என் ஃபிரண்ட் முகுந்த் நிறைய சோஷியல் ஒர்க் பண்றான். அவன்கிட்டே சொன்னா, உடனே ஏற்பாடு பண்ணுவான். அது சரி, திடீர்னு ஏன் உங்களுக்கு இந்த யோசனை?"

சத்தியமான பதில் என்னை அறியாமலே வரத் துடிக்கிறது, 'நான் கண்ணாடியை மாத்திட்டேன்!' 

இதைச் சொன்னால் மணிக்குப் புரியாது. வெளியே வரத்துடிக்கும் வார்த்தைகளை விழுங்குகிறேன். சிரிக்கிறேன். அப்பனுக்கும், மகனுக்குமிடையே புன்முறுவல்கள் ஆயிரமாயிரம் சேதிகள் சொல்லும்.

S.L.V. மூர்த்தி, 
மௌன்டன்வியூ, கலிஃபோர்னியா

ஆத்மசாதகம்ஒரு யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர். 

இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான். 

அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்றார் வெற்றி பெற்ற ராஜா .

விளிம்புவரை தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் ஒன்று உனது கையில் தரப்படும்." 

அது முக்கிய சாலை ஒன்றின் வழியாக ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு மைல் தூரம் கொண்டு செல்ல வேண்டும். 

கூடவே உருவிய பட்டையத்தோடு எனது வீரர்கள் வந்துக்கொண்டு இருப்பார்கள். 

ஒருதுளி தண்ணீர் கீழே கொட்டினாலும் கூட அவர்களின் வாள் உன் தலையைச் சீவிவிடும். 

வெற்றியோடு முடித்துவிட்டால் விடுதலை" 

என்று பேரரசர் தனது நிபந்தனையை விதித்தார்.

குறிப்பிட்ட நேரம் வந்தது. 

இலட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையின் இரு பகுதிகளிலும் குழுமியிருந்தனர்.  

போர் வீரர்கள்  சாலையை ஒழுங்கு செய்து கொடுத்தனர். 

பேரரசர்  முன்னிலையில் முழுவதும் தண்ணீர் நிரப்பிய பாத்திரம் இளவரசனின்  கைகளில் கொடுக்கப்பட்டது. 

 ஒரு பகுதியில் இருந்த மக்கள் இளவரசனை ஊக்குவித்து  உற்சாகப் படுத்தினர். 

மறுபக்கத்தில் இருந்தவர்களோ கேலியும் பரிகாசமும் செய்து கூச்சலிட்டனர். 

இளவரசனின் இருபுறமும் வீரர்கள் உருவிய வாளோடு தண்ணீர் சிந்துமானால் வெட்டும்படி கவனித்துக்கொண்டிருந்தனர்.  

பாத்திரத்தை உறுதியாய் பிடித்துக்கொண்டான் இளவரசன் நடக்க  சுற்றுப்புறத்திலிருந்து கூச்சலும், பரிகாசமும், ஆர்ப்பாட்டங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது.  

எனினும் எதையும் பொருட்படுத்தாதபடி தண்ணீரிலே முழு கவனமும் வைத்து ஓட்டத்தை  வெற்றியோடு ஓடி🏃 முடித்தான் இளவரசன் .

இளவரசனை பாராட்டிய பேரரசர் 

இளவரசனே உன்னை கேலி செய்தவர்களுக்கு நீ தண்டனை வழங்கலாம்.  

உன்னை உற்சாக படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லலாம். 

அவர்களை கவனித்து வைத்திருக்கிறாயா என்று கேட்டார்.?

என்னை போற்றுபவர்களை நான் கவனிக்கவில்லை,

தூற்றுபவர்களையும் நான் பார்க்கவில்லை. 

"எனது கவனமெல்லாம் தண்ணீரில்  அல்லவா இருந்தது." 

விடுதலையோடு  கூட அரசர் ஒரு ஆலோசனை தந்தார். 

இளவரசனே

பாத்திரத்தில் உள்ள தண்ணீர் தான் உன் சரீரத்தில் உள்ள *ஆன்மா

வாழும்  நாட்களிலே  உன் ஆத்மாவில் கண்ணும்  கருத்துமாக இருந்து கடைசியில்  அதை *சிருஷ்டிகர்த்தாவிடம் 
ஒப்படைக்க வேண்டும். 

🏼போற்றுவோரைக் கண்டு பெருமை கொள்ளாதே.*

🏼தூற்றுவோரைக்கண்டு சோர்ந்துப் போகாதே. ஆத்மாவில் கவனம் வை என்றார்.

( படித்ததில் பிடித்தது)

சங்கல்பம்


🔯

பூஜை_துவக்கத்தில் தொடை மீது கை வைத்து ஏதோ சொல்றாங்களே.. என்ன அது?

சங்கல்பம் உறுதி மொழி. இப்படி நடக்க வேண்டும் என பிராத்திப்பது.. இந்த இடத்தில், இந்த நேரத்தில், இந்த நாளில்.. இப்படி துல்லியமாக கூறி, பிரபஞ்ச சக்தியிடம் முறையிடுவது.. மேலும்...

சங்கல்பம்

சங்கல்பம் என்பது உறுதி பூணுதல் ஆகும்..
திடசங்கற்பம் என இதனைக் கூறுவர். 
சங்கல்பம் இல்லாமல் எந்த ஒரு கிரியையும் நடைபெறுவதிற் பயனில்லை. 
இறை சந்நிதியில் நாம் செய்யப்போகும் கிரியையை விளக்கமாக கூறி, அதனை என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்பதயும் கூறி, இதன நான் செய்து முடிப்பேன் என்று உறுதி பூணுவதாகச் சங்கல்பம் அமைந்திருக்கும். 
சங்கல்பத்திலே இவற்றுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பெறுவது காலமும் இடமுமாகும். 
என்ன நாளில் எந்த இடத்தில் என்பது மிக விரிவாகவும், அழகாகவும் கூறப்பெறுகின்றது. 
பொருளுணர்ந்து இதனைக் கூறும்போது அதனைச் சுவைத்து இன்புறலாம்.

அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்கள் எவ்வளவு தூரம் வரலாற்று உணர்வு உடையவர்களாக, காலக் கணக்குகளை நுணுக்கமாகப் பேணி வந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதும்
புவியியல் அறிவிலும் சளைக்காத ஞானம் உடையவர்களாகப் பிரதேசங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி வைத்திருந்திருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் அறிந்து வியப்புற முடிகின்றது.

கிரியைகள் நடைபெறும் காலமும் இடமும் மிக முக்கியமானவை. அதனால் எந்த இடத்தில் எந்தக் காலத்தில் இக்கிரியையைச் செய்கிறோம் எனக் கூறிக்கொள்வது மரபு.

இப்போது சாதாரணமாக நாம் அறிந்தவரையி ஆண்டு, மாதம், திகதி கூறுவதுடன் காலநிர்ணயம் முடிந்து விடுகிறது. பூவுலகத்தில், ஆசியாக் கண்டத்தில், இலங்கைத்தீவில், யாழ்ப்பாணப் பிரதேசத்தில்என்னும் கிராமத்தில் என்று கூறுவதுடன் இடநிர்ணயம் முடிந்துவிடுகின்றது. ஆனால் இங்கே சுருக்கமாகன முறையிலும், விரிவான முறையிலும் தேவைக்கு ஏற்ற வகையிற் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்படுகின்ற வேறு வேறு வகையான சில சங்கல்ப வாக்கியங்களின் தமிழ்க் கருத்து தரப்படுகின்றது.

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர
ப்ரீர்த்யர்த்தம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சுப திதௌ அஸ்ய தேவஸ்யஅஹம் அத்ய கரிஷ்யே

என்னால் செய்யப்பட்ட எல்லாப் பாபங்களும் அழிந்து போவதற்காகவும், பரமேஸ்வரனின் மகிழ்ச்சிக்காலவும் இன்றைய இந்த சுபதினத்தில், இன்ன தெவத்தின், இன்ன கிரியையை நான் செய்கிறேன். இது மிகச் சுருக்கமான சங்கல்பமாகும்.

ஒரு பெரிய திருவிழா அல்லது கும்பாபிஷேகத்தின் உட்பிரிவுகளாயமையும் சிறு கிரியைகள் ஒவ்வொன்றும் தொடங்கும் போது இவ்வாறு சிறு சங்கல்பங்களைச் சிவாச்சாரியார் செய்வது மரபு. ஆனால் ஆரம்பத்தில் கோவில் தர்மகர்த்தா மற்றும் உபயகாரர்கள் ஆகியோரின் பெயர், நட்சத்திரம் முதலியன கூறி; கிரியை நடைபெறும் இடம், நாள், நட்சத்திரம், திதி, கிழமை, பட்சம், மாதம், அயனம், வருடம் என்பன யாவும் கூறி இந்த சங்கல்பம் நடைபெறும்.

பொதுவாக நாளாந்தம் நடைபெறும் பூஜை, அர்ச்சனை முதலியவற்றிற் பயன்படுத்தப்படும் சங்கல்பம் ஒன்றின் முழுமையான கருத்தை இங்கு பார்ப்போம்.

இறைவனின் கட்டலைப்படி, முதலாவது பிரமனின் இரண்டாவது பரார்த்தத்திற் சுவேதவராக கல்பத்தில், வைவஸ்த மனுவந்தரத்தில், இருபத்தெட்டாவது கால கட்டத்தில், கலியுகத்தில் முதற்பகுதியில், ஜம்புத் தீவில், பாரத வர்ஷத்தில், பரதகண்டத்தில், மேருமலைக்குத் தென்பாகத்தில் (இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரபவ முதலிய அறுபது வருடத்தில்)..
என்ற பெயரையுடைய வருடத்தில்…. அயனத்திலே…. ருதுவிலே…. மாதத்திலே…. பட்சத்திலே…… திதியிலே….. நட்சத்திரத்திலேகிழமையிலே அமைகின்ற இன்றைய சுபதினத்திலேநட்சத்திரத்திற் பிறந்த…. பெயரையுடைய இந்த எசமானனுடையதும் (கர்த்தா) அவரது குடுமபத்தினரதும், இக் கிராமத்தில் இருக்கும் மக்களதும் சுக நலன்களுக்காகவும், தைரியம், வீரம், வெற்றி, ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வரியங்கள் ஆகியவற்றின் அபிவிருத்திக்காகவும், தர்மம், அர்த்தம், காம்யம், மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கு புருஷார்த்தங்களின் சித்திக்காகவும், சந்தான விருத்தியின் பொருட்டும் தெரிந்தோ தெரியாமலோ சென்ற பிறப்புகளிலும், இப்பிறப்பிலும் செய்த பாவங்கள் அகலுவதற்காகவும்…. இடத்திலுள்ள…. என்ற பெயரையுடைய இறைவனின்….. என்ற கிரியையைக் குருமுகமா நான் செய்கிறேன்.

இங்கு இரு வகையான சங்கல்பங்கள் பார்க்கப்பட்டன. சங்கல்பத்தில் முக்கியமாக மூன்று பகுதிகள் இருக்கும். ஒன்று நான் இன்ன பலனை உத்தேசித்து இந்தக் கிரியையைக் குருமூலமாகச் செய்யப் போகிறேன்என்று திடமாக உறுதி கொள்ளுதல்.

அதன் அங்கமாக வரும் மற்ற இரு பகுதிகளும் காலம் பற்றியதும் இடம் பற்றியதுமாகும். இன்ன லாலத்தில் நான் செய்கிறேன்: என்பதை வருடம், அயனம், மாதம், பட்சம், திதி, நட்சத்திரம், வாரம் இவற்றைச் சொல்லிச் சுருக்கமாக நிறைவு செய்தல் முன்பு காட்டப்பெற்ற சங்கல்பத்தில் காணப்படும் ஒருவகை முறை. இதன் விரிவான முறையில் உலகின் உற்பத்தி முதல் இன்றுவரையான காலப்ப்குதிகளைச் சுவைபட வர்ணித்துக் கூறுதல்.

இதேபோல சங்கல்பத்தின் மூன்றாவது பகுதி, கிரியை நடைபெறும் இடத்தைப் பற்றியது. எந்தச் சுவாமியின் சந்நிதியில்எனச் சுருக்கமாகச் செய்யும் முறையும் உண்டு. அண்டங்கள் யாவற்றையும் வர்ணித்துக் கூறி அதனுள்ளே நமது கிராமம் வரை கூறிக்கொண்டு வருதல் விரிவான முறையாகும். இந்த முறையிற் சங்கல்பம் சொல்லி முடிக்கச் சுமார் ஒருமணி நேரம் தேவை..

 ஆனால் அதன் சுருக்கத்தை விளங்கிக் கூறும்போது சுவையான இலக்கியத்தைப் படிப்பதுபோல கற்பனை வளமும் சொல்லாட்சியும் சுவைத்து மகிழத்தக்கதாக இருக்கும். அந்த விரிவான மஹா சங்கல்பத்திலும் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.

ஓம் ஸ்ரீ பகவானும், மஹாபுருஷ்னும், ஸ்ரீமத் ஆதிநாராயண மூர்த்தியும் மனோதீதமான அளவிலாற்றலோடு சலனமின்றி இருக்கின்றவரும் அனந்தகோடி சூரியப்பிரபையோடு கூடினவரும் ஆகிய ஸ்ரீ மகாவிஷ்ணுவுடைய சுய மாயையாற் கற்பிக்கப்பட்டனவும் பெரும் ஜலப்பிரவாக மத்தியிலே சுற்றுகின்றனவும் அநேக வடிவுடையனவும் ஆகிய அநேககோடி பிரமாண்டங்களில் ஒன்றானதும்,

வெளிப்படாத சமநிலைக்களமுடைய பிரகிருதியானது மஹான், அகங்காரம், பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் முதலிய ஆவரணங்களாற் சூழப்பெற்றதுமாகிய;

இந்த பெரிய பிரமாண்ட கண்ட மத்தியில் எல்லாவற்றையும் அதிட்டிக்கும் ஆதிவராகத்தின் கொம்பிலே உலகிற்கு மூலஸ்கந்தமாகிய ஆதாரசக்தி ஆதி கூர்னங்களும் அனந்த, வாசுகீ, தக்ஷ, சங்கபால, குளிக, பத்ம, மஹாபத்ம, கார்க்கோடகர்களாகிய அட்டமஹா நாகங்களும்;

ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என்னும் அட்டமா யானைகளும் ஆகியா இவற்றின் மேல் வைக்கப்பட்டுள்ளதும்;

அதலம், விதலம், சதலம், தலாதலம், ரசாதலம், மஹாதலம், பாதாளம் என்னும் ஏழுலகங்களுக்கு மேலுள்ளதும்;

பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்னும் ஏழுலகங்களுட் கீழுள்ள பூலோகமும்;

சக்கர்வாள சைல வலய நடுவிலே சூழப்படுவதால் பெரிய நாளம்போன்ற ஆதிசேடனது ஆயிரம் முடி வரிசைகளில் அலங்காரமாகத் தாபிக்கப்பட்டுள்ளதும் திக்கு யானைகளின் துதிக்கைகளால் தூக்கப்பட்டுள்ளதும் புறத்தே பேரிருளாற் சூழப்பட்டதும் அகத்தே சூரிய கிரணப் பிரகாச முடையதும்; அம்புவதி, நயனவதி, சித்தவதி, காந்தர்வவதி, காஞ்சிவதி, அளகாவதி, அசோகவதி என்னும் புண்ணிய புரிகளால் மேலிடப்பட்டுள்ளதும்;

இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் லோகபாலகர்களால் அதிட்டிக்கப்பட்டதும்;

சக்கரவாளகிரியால் சூழப்பட்டதும்; உப்பு, கருப்பஞ்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தஜலம் என்னும் ஏழு சமுத்திரங்களினால் சூழப்பட்டதும்;

ஜம்பு, ப்லக்ஷம், சால்மலி, குசம், கிரவுஞ்சம், சாகம், புஷ்கரம், என்னும் ஏழு தீவுகளொடு விளங்குவதும், மஹேந்திரம், மலயம், சையம், சுத்தி, ருக்ஷம், விந்தியம், பாரியாத்திரம் என்னும் ஏழு குலமலைகளொடு விளங்குவதும், மதங்கம், ஹிரண்யசிருங்கம், மாலியவான், கிஷ்கிந்தம், ருஷ்யசிருங்கம் என்னும் ஐந்து மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும், இமயம், ஏமகூடம், சுதாசலம், நிசாசலம், சுவேதாசலம், சுநாசலம், சிருங்கவதம் என்னும் ஏழு பெரு மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும்;

இந்திரகண்டம், கசேருகண்டம், தாமிரகண்டம், கபத்திகண்டம், நாககண்டம், சௌம்யகண்டம், கந்தர்வகண்டம், சரபகண்டம், பரதகண்டம் என்னும் ஒன்பது கண்டமயமானதும்;

மஹாமானசத் தாமரைவடிவவான ஐம்பது கோடி யோசனை விசாலமுடைய பூமண்டல நடுவிலே, சுமேரு, சிஷதம், ஏமகூடம், சந்திரகோணகூடம், மஹேந்திரகூடம்,விந்த்யாசலம், சுவேதாசலம் என்பனவற்றுக்கும்,
 ஹரிவர்ஷம், கிம்புருவர்ஷம் என்பவற்றுக்குத் தெற்கே கர்மபூமியில்; மது, வன, குலம் என்பவற்றுக்குத் தென்புறத்திலே;
பொதியமலைக்கு வடக்கே,
 தென்சமுத்திரத்திற்கும் இமயமலைக்கும் நடுவே உள்ளதும்,
ஒன்பது யோசனை அளவு கொண்டதும், பாரதம், கிம்புருஷ்ம், ஹரி, இளாவிருதம், குரு, பத்திராள்வம், ரம்யம், ஹிரண்மயம், கேதுமாலம் என்னும் ஒன்பது வர்ஷ்ங்களில் ஒன்றாகிய பாரத வர்ஷத்திலே, ஸ்வர்ணப்ரஸ்தம், சந்த்ரம், சுபித்தி, ஆவர்த்தகரமணம், மதங்கஜாவரணம், மஹ்வாரண, பாஞ்ச ஜன்யவகம், சிங்களம், இலங்கை என்னும் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப்பட்ட பாஸ்கர க்ஷேத்ரத்திலே,
தண்டகாரண்யம், கதளிகாரண்யம், வடாரண்யம், தேவதாரண்யம் என்னும் பதினொரு வனங்களோடு கூடியதும்;

அங்கம், வங்கம், கலிங்கம், காம்போஜம், கௌசலம், காஸ்மீரம், கசூரம், கர்ஜூரம், பர்ப்பரம், மருதம், குரு, காந்தாரம், சௌவீரம், சௌராஷ்டிரம், மத்ரம், மகதம், ஆந்திரம், நிஷதம், சிந்து, தசார்ணம், மாளவம், நேபாளம், பாஞ்சாலம், வங்காளம், மலையாளம், சீழம்,, கேரளம், சிங்களம், கௌடம், கோடம், கீகடம், கர்நாடகம், கரகாடம், மரகாடம், பாநாடம், பாண்டியம், புளிந்தம், குந்தம், திரிகர்த்தம், லாவந்தி, அவந்தி, விதேயம், விதர்ப்பம், கேகயம், கோசலம், கொங்கணம், டங்கணம், ஹூணம், மற்சம், வற்சம், சகலம்பாகம், பாஹ்லிஙகம், யவனம், சாளுவம், சப்பன்னம், என்னும் ஐம்பத்தாறு தேசங்களாககிய பலவித பாஷைகளையுடைய விஷேடித்த இராச்சியங்களினாலே அலங்கரிக்கப்பட்டதும்;

ஸ்வாம்யவந்தி குருக்ஷேத்திரத்திலே, கங்கை, யமுனை, துங்கபத்ரை, சந்த்ரபாகை, ப்ரணீதை, பம்பை, பாபப்ரசமனீ, பயோக்ஷி, பல்குனி, பவநாசினி, பீமரதி, சரஸ்வதி, குமுதவதி, சிந்துநதி, அர்ஜூனி, கிருஷ்ணவேணி, பிநாகினி, கோதாவரி, மலாபஹாரி, தாம்ரபர்ணி, காவேரி, வேகவதி, வஞ்சுழி, சரயு முதலிய ஆயிரம் நதிகளோடு விளங்குவதும்;

அயோத்தி, மதுரை, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரக முதலிய முக்திநகரங்களோடு கூடியதும் சுநகம், வற்சநகம், குல்மநகம், சவாமிநகம், மஹாமானச ஸ்ரீஓருஹ வடிவான புஷ்கரத்யம், திரிகூடம், கைலாசம் என்னும் இவைகளின் நடுவாகிய பூமண்டத்தில்;

பாற்கடல் நடுவே ஆதிசேடனது படமாகிய மஞ்சத்திற் சயனிக்கும் மஹாவிஷ்ணுவினுடைய உந்திக்கலத்திற் தோன்றியவரும் சகல வேத நிதியாயுள்ளவரும்;

சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் முதலிய மகானகளுக்கும் இந்திரன் முதலிய முபத்து முக்கோடி தேவர் திர்யக் மனுடர் மலை முதலிய எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேத சராசரங்களுக்கும் அனேககோடி பிரMஆண்டங்களுக்கும் ஆதாரபூதமான சிருஷ்டியில் முயன்றவரும், இரண்டு பரார்த்தம் சீவிப்பவருமான பிரம்மாவின் முதற் பரார்த்தமாகிய ஐம்பது வருடம் அது கழிந்தபின் இரண்டாம் பரார்த்தமாகிய ஐம்பது வருடத்தின் முதலாம் வருடத்திலே ,முதலாம் மாதத்திலே முதலாம் பக்ஷத்திலே முதலாம் நாளிலே பகலிலே இரண்டாம் சாமத்திலே மூன்றாவது முகூர்த்தத்திலே பதின்மூன்றாம் நாழிகையிலே நாற்பத்திரண்டு வினாடி சென்று நாற்பத்திமூன்றாம் வினாடியிலே முதற்பிராணம் தொடங்கும் காலத்திலே;

பார்த்திவம், அனந்தம், கூர்மம், பதுமம், வராகம், சுவேதவராகம், பிரளயம், என்னும் ஏழு கற்பங்களுள் சுவேதவராக கற்பத்திலே;

சுவாயம்புவர், சுவாரோசிஷர், உத்தமர், தாமசர், ரைவதர், சாக்ஷூஷர், வைவஸ்வதர், சூரியசாவவர்ணி, பிரமசாவர்ணி, உருத்திரசாவர்ணி, இந்திரசாவர்ணி, அக்கினிசாவர்ணி, ரௌச்சியர், பௌச்சியர் என்னும் பதினான்கு மநுக்களின் காலமாகிய மன்வந்தரங்கஊள் ஏழாவதாகிய வைவஸ்வத மன்வந்தரத்திலே;

இருபத்தேழு சதுர்யுகம் கழிய இப்போது நிகழும் இருபத்தெட்டாவது சதுர்யுகத்திலே;

பதினேழுலக்ஷத்து இருபத்தெண்ணாயிரம் வருடமுடைய கிருதயுகம்கழிய;

பன்னிரண்டு லக்ஷத்துத் தொண்ணூற்றாறாயிரம் வருடமுடைய திரேதாயுகமும் கழிய;

எட்டுலக்ஷத்து அறுபத்துநாலாயிரம் வருடமுடைய துவாபரயுகமும் கழிய;

நாலுலக்ஷத்து முப்பத்தீராயிரம் வருடமுடைய நிகழ்வதான கலியுகத்திலே;

ஐயாயிரத்தொரு வருடம் கழிய ஐயாயிரத்திரண்டாம் வருடமும் மற்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமம், த்சரதராமம், பலபத்திரராமம், பௌத்தம், கல்கி என்னும் பத்து அவதாரங்களுள்ளே ஒன்பதான பௌத்த அவதாரத்திலே;

யுதிஷ்டிர, விக்கிரம, சாலிவாகன, விஜயாபிநந்தன, நரசிங்கத் துருபத, நாகார்ச்சுன சகர்களாகிய ஆறு சக்கரவத்திகளின் அப்தங்களுள்ளே மூன்றாவதாகிய சாலிவாகன சகாப்தத்திலே;

ஆயிரத்தெண்ணூற்றிருபத்திரண்டு வருடங்கழிய நிகழ்கின்ற ஆயிரத்தெண்ணூற்றிருபத்து மூன்றாம் வருஷ்மாகிய வழங்குகின்ற சௌரமானம், சாந்திரமானம், சாவனமானம், நக்ஷ்த்திரமானம், பார்ஹஸ்பத்தியமானம் என்னும் காலவகைகளாய் நடைபெறும் பிரபவ முதலிய அறுபது வருஷங்களுள்ளே:

மூன்றாம் விம்சதியான சௌரமான சார்வரி என்னும் பெயருடைய வருஷ்த்திலே தக்ஷிணாயத்திலே சரத்ருதுவிலே ஐப்பசித் மாதத்திலே பூர்வபக்ஷத்திலே வியாழக்கிழமையோடு கூடியதும், விசாகநக்ஷ்த்திரத்தோடு கூடியதும், ஆயுஷ்மான் யோகம், பாலவகரணம், துலாலக்னம் முதலிய புண்ணீய விசேஷங்களோடு கூடியதும் ஆகிய துவிதியை என்னும் புண்ணிய திதியிலே அநாதியே அவித்தையின் தொடர்பால் நிகழுகின்ற இந்தப் பெரிய சம்சாரசக்கரத்திலே பலவிதமாகிய கன்மகதிகளாற் பலவிதமாகிய யோனிகளிற் பின்னும் பின்னும் பலதரம் பிறந்து யாதோ ஒரு புண்ணிய கர்ம விசேஷத்தால் இப்போது மானுட உடம்பில் பிறவி விசேடத்தை அடைந்துள்ளேன்.

கோத்திரத்தில்……, நக்ஷத்திரத்தில்…, ராசியில் பிறந்த…… பெயருடைய எனது பிறவிப் பயிற்சியால் உடம்பெடுத்த நாள் முதல் இந்தக்கணம் வரையும் இடையில் நிகழ்கின்ற பால்யம், கௌமாரம், யைவனம், வார்த்திகம் என்னும் பருவங்களில்;

மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களாலும் செய்யப்படும் வினைகளால் சாக்கியம், சொப்பனம், சுழுத்தி என்னும் அவஸ்தகளில்,
காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் இவைகளினாலே, மெய்ம் வாய், கண், மூக்கு, செவி என்னும் ஞானேந்திரியங்களினாலும்;
 வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்களாலும் அறிந்தும், அறியாமலும் என்னாற் செய்யப்பட்ட புத்தி  பூர்வமாக விளங்குகின்ற பிரமஹத்தி கட்குடி, பொற்களவு முதலிய மகாபாதஙகங்களும் உபபாதங்களும்;

அறியாமையினால் ஒருதரம் செய்யப்பட்டவையும்,
அறிந்து ஒருமுறை செய்யப்பட்டவையும்,
அறிந்தும் அறியாமலும் ஒருமுறை செய்யப்பட்டவையும்,
மிகப்பயின்று செய்யப்பட்டவையும்,
 இடையீடின்றிப் பயிற்சியாகாக்ச் செய்யப்பட்டவையும்,
 நெடுங்காலம் பயிலப்பட்டவையும்,
ஒன்பதும் ஒன்பது வகையும்,
பலவும் பலவையும் ஆகிய எல்லப் பாவங்களையும்;

உடனே தீர்த்தற்பொருட்டு ரத்னாகரம், மஹோததி ஆகிய இரு சமுத்திரங்களுக்கு நடுவே கந்தமான பர்வதத்திலே பாஸ்கரக்ஷேத்திரத்திலே காசி விஸ்வேஸ்வரர் ராமநாதர் சேதுமாதவர் காலபைரவ்ர் சீதா ல்க்ஷ்மண பரத சத்துருக்ன ஹனுமாரோடு கூடிய ராமச்சந்திரர் என்பவர்களின் சந்நிதியில்;

சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் சந்நிதியில், ஹரிகரர் முதலிய பல தேவர்களின் சந்நிதியில், தவப்பிராமணர்கள் சந்நிதியில்;

இயன்ற நியமஙத்தோடும் இயன்ற வகையில் இயன்ற திரவியங்களோடு தர்மசாஸ்திரங்களிற் சொல்லியபடி சபையினரை வழிபடுதலை முன்னிட்டு அச் சபையாருபதேசித்தபடி சர்வ பாபப் பிராயச்சித்தமாக சர்வ பாபங்களும் ஒழியும் பொருட்டு ஸ்ரீராம தனுஷ்கோடி ஸ்நானத்தை (பொருத்தமான கிரியையை கூறவேண்டும்) நான் செய்கிறேன்.

இந்த சங்கற்பத்தில் மிகப்பல விடயங்கள் பற்றி நாம் மனங்கொள்ளலாம்.
1.    நாம் ஆலயங்களைலே கிரியைகள் ஆற்றத் தொடங்கும்போது திரிகரணங்களாலும் இறைவனை நாடி அவனையே சிந்தித்து மன ஒருமைப்பாடு கொண்டு அதன்பின் இச்செயலை நான் செய்து முடிப்பேன் என்று உறுதிகூறி சங்கல்பப் செய்வதன் அவசியம் புரிந்து கொள்ளப்படுவது.

2.    அந்த சங்கல்பத்திலே என்ன கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல்.

3.    அங்கு பயன்படுத்தப்படும் சொற்செட்டான வார்த்தைப் பிரயோகங்களும் அழ்கான அடுக்கு மொழிகளும் அற்புதமான கற்பனை வளமும் சுவைத்து இன்புறத்தக்கன.

4.    புவியியல் ரீதியாக, உலக அமைப்பும் அதன் உட்பிரிவுகளும்சொல்லப்படும் முறை வியப்போடு உற்றுநோக்கத்தக்கவை. அதுமட்டுமன்றிப் புராண இதிக்ஹாசங்களிற் சொல்லப்பட்ட இத்தகைய விடயங்களையும் புவியியல், விஞ்ஞான, வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கும் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்தல்.

5.    காலம் பற்றிய சிந்தனை எவ்வாறு நம் முன்னோர்கள் உள்ளத்தில் தெளிவுபடுதப்பட்டிருந்தது என்பதை அறிவதோடுபருவகாலங்கள், அதன் உட்பிரிவுகள் இவைபற்றிய விரிவான சிந்தனைகள் அவதானிக்கத்தக்கவை.

6.    இவற்றோடு தத்துவார்த்தமான இன்னொரு சிந்தனையும் நமது உள்ளத்தில் துளிர்விடவேண்டும்.  
நாம் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறோம். அந்தக் கிராமத்தின் பெயரையும் விரிவான சங்கல்பங்களின்போது சொல்கிறோம்.
அந்தக்கிராமத்தை அடுத்த நகரம், மாகாணம், நாடு, கண்டம் என விரிந்து கொண்டு போகின்ற இந்தப் பிரபஞ்சம் எனும் பெரும் அண்டத்தை இங்கு நாம் மனக்கண்ணீற் காண முடிகிறது.
நாம் இந்தப் பேரண்டத்தின் ஒரு துளியில் நிற்கின்றோம் என எண்ணி நமது சிறுமையையும் ஆண்டவனின் பெருமையையும் கருதவேண்டும்.
இதேபோல் நமது வாழ்நாள் ஆகக்கூடியது நூறு ஆண்டுகள். இந்தச் சங்கல்பத்திலே சொல்லப்படுகின்ற காலக்கணக்குகள் யுக யுகாந்திரமாக இந்தப் பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் ஆண்டவனின் மகத்துவம்தான் என்னே என்ற வியப்பும் குறிப்பிடத்தக்கதன்றோ?

மேலே குறிப்பிட்ட  விவரங்கள் மிகவும் சிறிதே 
மேலும் விரிவாக சங்கல்பம் செய்ய முடியும்
ஆனால் காலம் தேசம் வர்த்தமானம் இவற்றை அனுசரித்து நீங்கள் சங்கல்பம் செய்து கொள்ளலாம்..

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...