பஞ்சபூத இயக்க விதிகள் - 2

பஞ்சபூதக் கருத்துக்களை மையமாக அமைத்து உண்டாகும் கருத்துக்கள் அழிவற்றவை. உண்மையானவை. இவற்றின் சூட்சுமத்தை உணரத்தான் யாருமில்லை. உணர்ந்து கூறிய கருத்துக்களை , மூடக் கருத்துக்கள் என்று கூறினாலும், பின்னாளில் விஞ்ஞானம் அதனை மெய்ப்பித்து காட்டி வருகிறது. அவை மூடக் கருத்துக்கள் அல்ல. அதை உணராத மெய்யறிவாளர் எனக் கூறிக் கொண்டிருக்கும் நாம் தான் மூடர்கள் என்பதனை பின்னாளில் உணர்கிறோம். 

உலகத்துப் பொருட்கள் அனைத்தையும் 5 ( ஐந்து ) பிரிவாகப் பிரித்து பஞ்சபூதத்திற்குள் அடக்கிவிடலாம். 

ஐந்தின் செயலை நாம் உணர்ந்திருந்தால் தான் இவற்றை பகுத்து பிரிக்கும் நுண்ணறிவும் இருக்கும். 

சுவை ஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு 

என்பார் திருவள்ளுவர். 

பஞ்சபூதங்களே உயிரற்ற ஜடப் பொருள்களையும், உயிர்ப்பொருள்களையும், ஜீவ பிராணப் பொருள்களையும் இயக்குகின்றன.

விண்ணில் உள்ள நட்சத்திரங்கள், சுற்றிவரும் கோள்கள் என அனைத்தும் இவ்வைந்திற்குள்ளே அடக்கம்.

நம் தமிழ் மொழி எழுத்துக்களும் அடக்கம். 

பிருதிவி - மண்
அப்பு -  நீர்
தேயு - நெருப்பு
வாயு - காற்று
ஆகாசம் - வெளி.
இந்த பஞ்சபூதத்தின் கலப்பு இல்லாத பொருள்களே இல்லை.

பஞ்சபூதங்களை (1) சூட்சும கண்களால் பார்க்க இயலாதவை (2) கண்ணால் பார்த்து இயக்(ங்)கும் பொருள்கள் என இரு பிரிவாக பிரிக்கலாம்.

வேதங்கள் வியக்தம் அவ்வியக்தம் என கூறுகின்றன.

கண்ணிற்கு புலப்படாத சூட்சும பஞ்சபூதங்களே சுத்த சைதன்யமாகிய நித்ய வஸ்து அல்லது சச்சிதானந்த சொரூபமாகிய பிரம்மம். இந்த பிரம்மத்திலிருந்து மூலப் பிரகிருதி தோன்றுகிறது.

இதிலிருந்து முக்குணங்கள் தோன்றி உலகத்தை படைக்கின்றன.

சூட்சும ஐம்பூதங்களிலிருந்து ஸ்தூல ஐம்பூதங்கள் தோன்றுகின்றன.

இந்த ஸ்தூல ஐம்பூதங்களில் தோன்றும் முக்குணங்கள் தான் குணபேதம் அடைகின்றன.

ஒவ்வொரு பூதத்தையும் இரு பிரிவாக பிரித்து, ஒரு பாதியை அழிவில்லாமல் நிறுத்தியும், மறு பாதியை மற்ற நான்கு பூதங்களுக்கு சமமாகப் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. 
உதாரணமாக, நெருப்பு பூதத்தில் பாதி அப்படியே நிறுத்தி, மற்ற அரை பாகத்தினை ஏனைய நான்கு பூதங்களிலும் சமமாக கலக்கும் போது ஸ்தூல பிரபஞ்சம் உருவாகிறது.

இப்படி ஸ்தூலமாகப் பிரிந்த பஞ்ச பூதங்களே தேகமாகவும், அதன் 96 தத்துவங்களுமாக மனிதனை இயக்குகின்றன.

இந்த ஐந்து பூதங்கள் தான் ஞானேந்திரியம். அதனை ஆதாரமாகக் கொண்டு இயங்குபவை கர்மேந்திரியங்கள்.

கர்மேந்திரியங்கள் ஐந்தாகவும், தன் மாத்திரைகள் ஐந்தாகவும், மனம், புத்தி, சித்தம் , அகங்காரம் என்ற கரணம் நான்காகவும் என இப்படி ஆன்ம தத்துவம் இருபத்தி ஐந்தாக மனிதனை வழி நடத்தும். 

மண்ணில் ஐந்து குணங்களும்,
 நீரில் நான்கு குணங்களும்,
 நெருப்பில் மூன்று குணங்களும்,
காற்றில் இரண்டு குணங்களும், 
ஆகாயத்திற்கு ஒரு குணமும் உண்டு.

பிருத்வி எனப்படும் மண்ணிற்கு ஐந்து குணம் இருப்பதால் இது மகா பஞ்சபூதமாகும். 
மண் தோற்றுவிக்க மற்ற தாது, தாவர சங்கமங்கள், தேவர், நரர், மக்கள் யாவரும் உற்பத்தியாகின்றனர்.

மனிதனில் இப்பஞ்ச பூதங்களை எப்படி அறிவது?

பஞ்சபூதங்கள் இத்தன்மை நீங்கின மண் உடலாகவும், நீர் வாயாகவும், தீ கண்ணாகவும், காற்று மூச்சாகவும், ஆகாயம் செவியாகவும் உணரப்படுகிறது.

இவ்வைந்தும் ஐம்பொறிகள் எனப்படும். உடம்பு ஊனாகவும், நீரால் வாய்ச் சுவையாகவும், தீ எனப்படும் நெருப்பு கண் ஒளியாகவும், காற்றால் மூக்கு நாற்றம் வாசனை உணரப்படுவதாகவும், ஆகாயத்தினால் செவி ஓசையாகவும் பொருந்தி நிற்கின்றன.

மண்ணின் பகுதி - நரம்பு, இறைச்சி, எலும்பு, மயிர், தோல் ஆகிய ஐந்தும்,
 நீரின் பகுதி - சிறு நீர், மூளை, நிண நீர், இரத்தம், சுக்கிலம், சுரோணிதம் ஆகவும்,
இவைகளின் கூட்டு அதாவது மண்ணும் நீரும் இணைந்து - பூமியிலிருந்து அன்னம் தோன்றி, அன்னத்திலிருந்து ரசம் தோன்றி, ரசத்திலிருந்து உதிரந்தோன்றி, உதிரத்திலிருந்து மாமிசம் எனப்படும் இறைச்சி தோன்றி, மாமிசமாகிய ஊனில் (கொழுப்பு) இருந்து அஸ்தியாகிய எலும்பு தோன்றி, எலும்பிலிருந்து மச்சையாகிற மூளை தோன்றி, இந்த மூளையில் இருந்தே சுக்கில சுரோணிதமும் தோன்றுகின்றன.

தொடரும்..... Post a Comment

0 Comments