குழந்தைகள் கண் நலம்இப்பரந்த பூமியில் பார்வையிழப்பு என்னும் பெரும் சுமையை மிக அதிகமான அளவில்  தாங்கிக் கொண்டிருக்கும் தேசம் நமது பாரத தேசம். 1.09 பில்லியன் மக்களைக்  கொண்ட நம் தேசத்தில் 15 மில்லியன் பேர் பார்வையிழந்தவர்கள். 

52 மில்லியன் பேர்  பார்வைக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள்.
இவர்களில் 3,20,000 பேர்  குழந்தைப்பருவத்திலேயே இந்த சுமையைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள்.   

பார்வையிழப்பிற்க்கான மூல காரணங்களில் 66% குணப்படுத்தக்கூடிய அல்லது  தடுக்கக்கூடிய காரணங்களால் பார்வையிழந்தவர்கள்.  

ஒவ்வொருநாளும் கண் சார்ந்த  விபத்துகள், தொற்றுநோய்க் கிருமிகள், ஊட்டச் சத்துக்குறைவு, பிறவியிலேயோ,  பரம்பரையாகவோ அல்லது முறையற்ற கண் பராமரிப்பு, வேறு ஏதாவது நோய்க்கிருமிகள்  போன்ற பல்வேறு காரணங்களால் பார்வையிழப்பு என்னும் கொடுமைக்கு ஆளாகும்  குழந்தைகளும் ஏராளம்.

2.இதுதான் இயல்பான பார்வையா?

குழந்தைகள் தங்களுக்கு கண்ணில் குறைபாடு இருக்கிறது என்பதை அவர்களாகவே புரிந்து  கொள்ள முடியாது. கண்ணில் குறைபாடு உள்ள குழந்தைகள் அந்தக் குறைகளுடனேயே  தமது வேலைகளை, குறிப்பாக படிப்பது, விளையாடுவது, போன்ற வேலைகளை  ‘இதுதான் இயல்பான பார்வை’ என்ற எண்ணத்துடன் செய்கின்றனர்.

3.பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமை

குழந்தைகளின் கண் நலத்தில் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிக  முக்கியமான பங்கு இருக்கிறது. இதனை பெற்றோர்களும் ஆசிரியர்களும் மட்டுமே  கவனித்து குழந்தைகளுக்கு தேவையான உதவியை செய்யலாம்.

4.வரும் முன் காப்போம்

Prevention is better than cure (ஒரு நோயை குணப்படுத்துவதைக்  காட்டிலும் அந்த நோய் வராமல் தடுப்பது எளிது), என்றும் Early detection can  be cured the Diseases (ஒரு நோயை ஆரம்பக்கட்ட நிலையிலேயே  கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்துவது மிகவும் எளிது) என்றும் சொல்வார்கள். அது  குழந்தைகளின் கண் நலத்திற்க்கு மிக அதிகமாகவே பொருந்தும்.

5.கருவறையில் நம் குழந்தைகளின் கண் நலம்

 * நெருங்கிய உறவினருக்குள் - பரம்பரை கண் நோய் உள்ள குடும்பங்களுக்குள்  திருமண உறவை தவிர்த்தால் அதன் மூலம் பரம்பரைக் கண் பார்வைக்குறைபாடுடைய  ஒரு புதிய தலைமுறை உருவாவதைத் தடுக்கலாம். மேலும் நம் குழந்தைகள்  கருவிழிகளின் செயல்பாட்டை கருவறையிலேயே தொலைத்துவிட்டு பிறவியிலேயே  பார்வையற்றவராக பிறக்கும் நிலையை தவிர்க்கலாம்.

 * கருவுற்றிருக்கும் தாயின் தினசரி உணவில் பால், முட்டை, பச்சைக் காய்கறிகள்,  கீரை வகைகள் தேவையான அளவு இருக்க வேண்டும்.

 * மருத்துவர்களின் ஆலோசனையின்றி அடிக்கடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்துப்பார்ப்பது  நல்லதல்ல.

 * கருவுற்றிருக்கும் தாய்மார்கள் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்றவற்றை  பார்ப்பதை தவிர்ப்பதும் நல்லது.

 * தகுதியுள்ள மகப்பேறு மருத்துவர் மூலமாகவே பிரசவம் நடைபெற வேண்டும்.  தகுதியற்றவற்றவர்கள் செய்யும் பிரசவத்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு கண் இமைகளை  திறக்க முடியாமை (Ptosis) போன்ற பிரச்சினைகள் வரலாம்.

 *கருவுற்றிருக்கும் காலத்தில் தாய்க்கு அம்மை அல்லது மஞ்சள் காமாலை  போன்ற  நோய் வந்திருந்தால் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை கண் மருத்துவரிடம் காண்பிப்பது  நல்லது.

* ஆக இந்த குறிப்புகளை மனதில் வைத்துக் கொண்டு தாய்மார்கள் கருவுற்றிருக்கும்  காலத்தில் மிகக் கவனமாக செயல்பட வேண்டும். “முத்துப்போல் குழந்தை பிறக்க  வேண்டும் மூன்று கிலோ எடை இருக்க வேண்டும்” என்பார்கள். அது மட்டுமல்ல்  “முத்துச்சுடரென ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் விழிகளுடனும் பிறக்க வேண்டும்”.

6.பிறந்த குழந்தைகளின் கண் நலம்

* குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்திருந்தால், குழந்தைக்கு ‘குழந்தைகள் கண்  சிகிச்சை நிபுணரின்’ (Pediatric Ophthalmologist) ஆலோசனை மிகவும்  அவசியம்.  ஏனெனில் Retinopathy of Prematurity எனப்படும் “வளர்ச்சி  குறைந்த/முழு வளர்ச்சியடையாத விழித்திரை நோய்” ஏற்பட வாய்ப்பு உண்டு.  ஆரம்ப  நிலையில் இதனை குணப்படுத்த முடியும்.

* குழந்தை பிறந்த இரண்டு வாரங்களுக்கு கண்ணீர் சுரக்காது. மீறி கண்ணீர்  வருமேயானால் கண் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

* கை வைத்தியம், பரம்பரை வைத்தியம் என்ற பெயரில் பக்கத்து வீட்டுப் பாட்டி  சொன்னார், கோடி வீட்டு மாமி சொன்னார் என்று தாய்ப்பால், எண்ணெய்  போன்றவற்றை குழந்தையின் கண்களில் விடுவது தவறு. இவற்றின் மூலம் கண்களில்  நோய்த் தொற்று பரவும் அபாயம் அதிகம்.

* குழந்தை மாறு கண் பிரச்சினையுடன் பிறந்திருந்தால்  “குழந்தை அதிர்ஷ்டத்தை  அள்ளிக் கொண்டு வந்திருக்கிறான்” என்று ஆனந்தக் கும்மியடிக்க வேண்டாம். மாறு  கண் அதிர்ஷ்டத்தின் அடையாளமல்ல. அதனை சரி செய்யாவிடில் பின்னாளில்  பிரச்சினைகள் வரலாம். அந்தக் குழந்தைக்கு உடனடித் தேவை கண் மருத்துவரின்  முறையான ஆலோசனை மற்றும் வழிகாட்டல். கவனிக்காவிட்டால் ஆம்ப்ளியோப்பியா  (Amblypia) எனப்படும்  சோம்பேறிக்கண் (Lazy Eye) நோய்க்கு ஆளாகலாம்.  பாதிக்கப்பட்ட கண் தன் முழு செயல்பாட்டையும் இழக்க நேரிடலாம்.

* குழந்தைகளுக்கு உரிய காலங்களில் போட வேண்டிய தடுப்பூசிகள், சொட்டு  மருந்துகள் போட வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரிப்பதுடன் கண் தொற்று நோய் உட்பட சில நோய்களின் க்டும் விளைவுகளிலிருந்து  குழந்தைகள் காப்பாற்றப்படுவதற்க்கும் வாய்ப்பு உண்டு.

* குழந்தைகளுக்கு தட்டம்மை, சின்னம்மை (Measles and Chicken Pox)  போன்றவை வந்தால் அவை குணமானவுடன் கண் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது  நல்லது. ஏனெனில் கிராமங்களில் “குழந்தை மேலே அம்மா வந்தா.  கண்ணைப்  பறிச்சுட்டு போய்ட்டா, தெய்வக் குத்தம் வந்துருச்சு” என்றெல்லாம் பேசுவதை  கவனித்திருப்பீர்கள். நோய்த்தொற்றின் காரணமாக கண் பார்வைக்குறைபாடு  ஏற்பட்டிருக்கலாம். நம் கவனக் குறைவுக்கு கடவுளை குறை சொல்ல வேண்டாம்.

* குழந்தைகளின் கருவிழிகளுக்கு முன்புறம் கார்னியாவில் பூ விழுந்தது ஏதேனும்  தோற்றமளித்தால் கண் மருத்துவரின் கவனிப்பு தேவை. அது புரை  (Cataract)  அல்லது புற்று நோயாக (Cancer) இருக்கலாம். ஆம் குழந்தைகளுக்கும்கூட  கேட்டராக்ட் வருவதுண்டு.

* நம் குழந்தைகளின் கண் பார்வை குறித்து நாமே ஒரு விளையாட்டின் மூலம் தெரிந்து  கொள்ளலாம். குழந்தை நிமிர்ந்து படுத்திருக்கும்போது அதன் தலைக்கு நேராக பல  நிறங்கள் கொண்ட ஒரு பந்து அல்லது பலூனை பிடித்துக் கொண்டு சொடுக்கு போட்டு  ஓலியெழுப்பலாம். குழந்தை அந்த பலூனைப் பிடிப்பதற்க்காக தனது கைகளையும்  கால்களையும் உயர்த்தி உதைக்கலாம். அந்த பலூனை / பந்தினை வலது புறமாகவும்,  இடது புறமாகவும் தொடர்ந்து ஒலியெழுப்பிக் கொண்டே அசைக்க வேண்டும். அவ்வாறு  செய்யும்போது குழந்தை தன் கண்களை வலது புறமாகவும் இடது புறமாகவும் அசைக்க  வேண்டும்.  அவ்வாறு அசைக்காமல் நிலைகுத்தினாற்போல் பார்த்தால் தொடர்ந்து அந்த  விளையாட்டை நடத்த வேண்டும்.  குழந்தையிடமிருந்து முறையான எதிர்நடவடிக்கை  ஏதும் இல்லை என்றால் குழந்தைக்குத் தேவை உடனடி கண் மருத்துவ சேவை.

7. குழந்தைகளின் உணவுப் பழக்கம்

பொதுவாகவே சத்துள்ள ஆகாரங்கள் நம் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தேவை.  சரியான உணவுப்பழக்கம் கண் நலத்துக்கு மிக மிக அவசியம். இது குழந்தைப்  பருவத்திலிருந்தே கவனிக்க வேண்டிய குறிப்பு. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு  மிஞ்சிய வேறேதுமில்லை. மற்ற உணவுகள் கொடுக்க ஆரம்பித்தவுடன் கவனிக்க  வேண்டிய முக்கியமான குறிப்புகள்:

* வைட்டமின் ஏ : ஜெராஃப்தால்மியா எனப்படும் குழந்தைகளின் கண்கள் உலர்ந்து  போகச் செய்யும் பிரச்னைக்கும், மாலைக் கண் நோய்க்கும் முக்கியமான காரணம்  வைட்டமின் ஏ சத்துக்குறைபாடுதான்.

வைட்டமின் ஏ - பால், கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள்,பப்பாளி, முட்டை  மற்றும் கேரட் போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.

* வைட்டமின் பி : பார்வை நரம்பின் செயல்பாட்டிற்க்கு காரணமாக இருப்பது  வைட்டமின் பி.

வைட்டமின் பி - அரிசி, கோதுமை, முளை கட்டிய தானியங்கள், பீன்ஸ் மற்றும்  முட்டை போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.

* வைட்டமின் சி : - நமது கண்ணில் உள்ள ரத்தக்குழாய்களின் ஆரோக்கியத்திற்க்கு  வைட்டமின் சி மிகவும் அவசியம்.

வைட்டமின் சி ஆரஞ்சு, நெல்லி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கொய்யா,  எலுமிச்சை மற்றும் தக்காளி போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.

8. குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களும் கண் நலமும்

நம் குழந்தைகள் பொதுவாக விளையாடும்பொழுது ஏற்படும் விபத்துகளின் காரணமாக  பார்வையிழக்கும் வாய்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.

* குழந்தைகளுக்கு வழங்கப்படும் விளையாட்டுப் பொருட்கள் தேர்வில் கவனம் தேவை.

- வில் அம்பு விளையட்டு

- கில்லி தாண்டு

- பட்டம் விடுதல் போன்ற தடை செய்யப்பட்ட விளையாட்டுக்களை தக்க அறிவுரை கூறி  தடுப்பது நல்லது.

* மேலும் கூரான பொருள்களான பென்சில், பேனா, கூரான முனையுடைய ஸ்பூன்கள்,  கத்தி போன்றவற்றை வைத்து விளையாடுவதையும் தக்க அறிவுரை கூறி தடுப்பது  நல்லது.

9.பெற்றோர்களின் கனிவான கவனத்திற்க்கு

பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளுக்கு கீழ்க்காணும் பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால்  அவர்களது கண்மணிகளை பாதுகாக்க உங்கள் கண் மருத்துவர்களின் ஆலோசனையை  பெற வேண்டியது அவசியம்;

*உங்கள் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்திருந்தால்,

*உங்கள் குழந்தைகளுக்கு மாறுகண் குறைபாடு இருந்தால்,

*உங்கள் குழந்தையின் கண்களில் இருந்து அடிக்கடி கண்ணீர் வழிந்தால்,

*உங்கள் குழந்தையின் கண்கள் அளவுக்கு மீறி பெரியதாக இருந்தால்,

*உங்கள் குழந்தையின் கார்னியா (கண்ணுக்கு முன்புறம் உள்ள கருமையான பகுதியை  மூடியிருக்கும் மெல்லிய திசு) கலங்கலாகக் காணப்பட்டல்,

*உங்கள் குழந்தைக்கு அம்மை, மஞ்சள் காமாலை போன்ற நோய் வந்திருந்தால் அவை  குணமடைந்தபிறகு ஒரு முறை,

*உங்கள் குழந்தை வெளிச்சத்தைக் கண்டு பயந்தால், அதிகமான வெளிச்சத்தில்  தலையை கவிழ்ந்து கொண்டால் அல்லது கண்களை மூடிக் கொண்டால்,

*உங்கள் குழந்தை தலையை எப்போதும் ஒருசாய்த்தே பார்த்துக் கொண்டிருந்தால்,

*உங்கள் குழந்தை அடிக்கடி கண் வலி மற்றும் தலைவலி இருப்பதாகச் சொன்னால்,

*உங்கள் குழந்தை கண்களை சுழல முடியாமல் சிரமப்பட்டால்,

*உங்கள் குழந்தை பொருட்களை அல்லது புத்தகங்களை கண்ணுக்கு அருகே வைத்து  பார்த்தால் / படித்தால்,

*உங்கள் குழந்தைக்கு பார்க்கும் பொருட்களெல்லாம் இரண்டிரண்டாகத் தெரிந்தால்,

*உங்கள் குழந்தையினால் பள்ளியில் கரும்பலகையை பார்க்க முடியவில்லையென்றால்,

*உங்கள் குழந்தையின் கண்களில் காயம் பட்டால் (கண்களில் அடி பட்டால் கண்ணைக்  கசக்கக்கூடது),

*பொதுவாக கண்ணியலாளர்கள், குழந்தைகள் கண் மருத்துவ பரிசோதனை குறித்து சில  முக்கிய செய்திகளை குறிப்பிடுகிறர்கள். அவை பொதுவாக ஏற்றுக்  கொள்ளக்கூடியதுமாகும்.

*குழந்தை பிறந்த ஆறு மாத காலத்திற்குள் ஒரு முறை

*குழந்தைக்கு மூன்று வயது ஆகும்போது ஒரு முறை

*அதன் பின்னர் குழந்தைக்கு கண்ணில் ஏதும் பிரச்சினை இல்லை என்றாலும் இரண்டு  அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.

*ஒருவேளை உங்கள் குழந்தை கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால்  கண்டிப்பாக வருடத்திற்கொரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.

*கண்களில் ஏதேனும் தொற்று நோய்க் கிருமி பரவினால் மருத்துவர் ஆலோசனைப்படி  மட்டுமே மருந்துகளை உபயோகிக்காலாம்.

*ஒருவர் உபயோகப்படுத்திய சோப்பு, துண்டு மற்றும் சொட்டு மருந்துகளை மற்றவர்கள்  பயன்படுத்தக்கூடாது.

10.கண்கள் சிரமப்படுவதை தவிர்க்க...

*குழந்தைகள் படிக்கும்பொழுது நல்ல வெளிச்சம் இருக்கும் அறையில் படிக்க வேண்டும்.

*கண் கூசும் அளவிற்கு வெளிச்சம் இருக்கக்கூடாது.

*தொலைக்காட்சி பார்க்கும் பொழுதும், கம்ப்யூட்டரில் படிக்கும் பொழுதும்,  கம்ப்யூட்டரில் விளையாடும்பொழுதும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தூரத்தில்  உள்ள பொருட்களைப் பார்க்க வேண்டும்.  இவ்வாறு செய்வதால் கண் சோர்வு  அடைவதைத் தவிர்க்கலாம்.

*தினமும் சிறிது நேரம் குழந்தைகள் வெளியில் சென்று விளையாட வேண்டும்.

*குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கூர்மையான குச்சி, பேனா போன்ற பொருட்களை  வைத்துக் கொண்டு விளையாடவோ, ஓடவோ கூடாது.

*கண்ணாடி அணிந்திருக்கும் சிறுவர்/சிறுமியர் “பிளாஸ்டிக் லென்ஸ்” அணிவது  நல்லது.

குழந்தைகளின் பொதுவான கண் பிரச்சினைகள்/நோய்கள்

குழந்தைகளுக்கு பொதுவாக பார்வைத்திறன் குறைபாடு (Refractive Error), மாறு  கண் (Squint), சோம்பல் விழிகள் (Amblyopia), குறைப்பிரசவத்தில் பிறந்த  குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைந்த விழித்திரை நோய் (Retinopathy of  Prematurity), மற்றும் விழித்திரை புற்று நோய் (Retinoblastoma) போன்ற  பிரச்சினைகள் அதிகமாக பாதிக்கின்றன.

Post a Comment

1 Comments

  1. I am aсtually happy to glance at this bⅼog posts
    which includs tons of useful facts, thankѕ for providing such information.

    ReplyDelete