Ads

ads header

Ad Code

Google adsense

Saturday, May 25, 2024

காலம் பதில் சொல்லும்

ஒரு காட்டில் கரையான்கள் ஒன்று 
கூடி ஒரு புற்றை கட்டுவது என்று தீர்மானித்தன. அதற்கான இடத்தை தேர்வு செய்து, புற்றுக்கு உகந்த மண்ணை தேர்ந்தெடுத்து புற்றை கட்டத்தொடங்கின.  

அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்தது. கரையான்கள் கடுமையாக வேலை செய்வதைப் பார்த்தது. 

அன்றிலிருந்து கரையான்கள் வேலை செய்யும் இடத்திற்கு வருவதும், வேடிக்கை பார்ப்பதும் வழக்கமாக கொண்டிருந்தது பாம்பு. இப்படியே ஒரு வருடகாலம் சென்றது. கரையான்கள் 
புற்றை கட்டி முடித்தன. பாம்பு பேசியது.

''கரையான்களே! நீங்கள் கட்டிய புற்று அருமையாக இருக்கிறது. நான் ஒருமுறை உள்ளே சென்று பார்க்கட்டுமா?'' என்று கேட்டது.

கரையான்கள் சம்மதித்தன. பாம்பு புற்றுக்குள்ளே சென்று பார்த்தது. பாம்பு வெளியேவரும் என்று கரையான்கள் காத்திருந்தன. அது வெளியே வரவில்லை. கரையான்கள் வெளியிலிருந்து பாம்பை கூப்பிட்டன.  

''புற்று வசதியாக இருக்கிறது. இனி இது என்னுடையது. வேண்டுமென்றால், நீங்கள் இன்னொரு புற்றை கட்டிக்கொள்ளுங்கள். இங்கிருந்து கிளம்புங்கள், இல்லையென்றால் என் விஷத்துக்கு இரையாவீர்கள் என்று மிரட்டியது பாம்பு.

சோகத்தோடு கிளம்பின கரையான்கள். வழியில் சாதுவை சந்தித்து நடந்தவற்றை சொல்லி வருத்தப்பட்டன. சாது பாம்பிடம் பேசினார்.  

''பாம்பே! புற்றை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் உனக்கில்லை. அடுத்தவன் உழைப்பை திருடுகிறாயே, அடுத்தவன் உழைப்பை பலத்தால் பெறுவது நியாயமல்ல என்றார்.

பாம்பு பேசியது.

சாதுவே! உலகத்தில் பலசாளிகள் வைத்ததுதான் சட்டம் என்பது உங்களுக்குத் தெரியாதா? பலசாளியிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தது.

கரையான்கள் அழுதுகொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தன. சாதுவும் நகர்ந்தார். சில மாதங்கள் சென்றன.  

பாம்பு தனது குடும்பத்தோடு புற்றில் 
வசதியாக வசித்து வந்தது.  

ஒரு நாள் பாம்பு தனது குட்டிகளோடு புற்றிற்கு வெளியில் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த பருந்து பாம்பை கொத்திக்கொண்டு பறந்தது. குட்டிகள் கதறின. வானத்தில் பறந்து கொண்டிருந்த பருந்து பொத்தென்று பாம்பை கீழே போட்டது.  

பாம்பு விழுந்த இடம் சாதுவின் ஆசிரம வாசல். உயிர் பிரியும் தருவாயில் சாதுவிடம் பேசியது பாம்பு.  
சாதுவே! நான் இல்லாமல் குட்டிகளால் வாழ முடியாது. ஆகவே என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சியது.
  
அதற்கு சாது 'பாம்பே! விதி சொல்லிக்கொடுக்கும் பாடம் ஒன்றைத் தெரிந்துகொள். வலிமை, பலம் என்பது நிரந்தரமல்ல. இன்று எவற்றையெல்லாம் பலமாக உணர்கிறாயோ, அவற்றையெல்லாம் நாளை பலவீனமாக உணர்வாய். அதே போல, இன்று பலவீனமாக பார்க்கப்படுபவை பலமாக மாறும் காலமும் வெகு தொலைவில் இல்லை.  

ஆகையால், பலவானாக இருக்கும்போது பக்குவமாகவும், பிறருக்கு கெடுதல் 
செய்யாமலும் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் நீ அப்படி வாழவில்லை. கரையான் என்ற வலிமையில்லாத எதிரியை நீ தேர்ந்தெடுத்தாலும், பருந்து என்ற பலமான எதிரிக்கு பதில் சொல்லும் நிலைக்கு காலம் உன்னை தள்ளியிருக்கிறது''.  

''பாம்பே! நிதர்சனமான ஒரு உண்மையைத் தெரிந்துகொள். அடுத்தவனை வருத்தி, அதை ரசிக்கும் உன் குணத்தை இந்த உலகம் வேண்டுமானால் மறந்து போகலாம். ஆனால், நீ கீழே விழும்போது காலம் அதை உன் நினைவில் கொண்டு வரும்.   

அப்போது அதை தாங்கும் சக்தி உனக்கோ, உன் சந்ததிகளுக்கோ இருக்காது. உன் சந்ததிகள் உன் பாவத்தை பங்காக பிரித்துக்கொள்வார்கள்'' என்று சொல்லிவிட்டு சாது சென்றார்.  

அதற்குப் பிறகு பாம்பு என்ன செய்தது என்பது நமக்கு முக்கியமல்ல. காரணம் காலம் அதை தன் பிடியில் எடுத்துச் சென்றுவிட்டது. பலம் பொறுந்திய ஒருவனின் அராஜகம், அகந்தை, கோபம் ஆகியவற்றை காலம் ஒருநாள் எடுத்துச் சென்றுவிடும். அப்போது உணர்ந்து பார்க்கலாம் என்றால் காலம் அதற்கு 
இடம் தராது ...

No comments:

Post a Comment

Powered by Blogger.

Ad

Ad Code

Google Ad