மனதின் சக்தி

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்

ஒரு பெண், லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி. ஒரு பூ அருகிலிருந்தாலே, அவர் கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார். அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்வார்.

இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங். கலந்து கொள்ளப் போனார். அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள்.

'ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட் செய்யப் போகிறோம்' என்று பயந்தார்.

ஆனால் வேறு வழியில்லாமல், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார். பூக்களைப் பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மலும் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது.

மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறபோது "இந்த பூக்களைப் பாருங்கள். நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன.." என்று வியந்தபடி கூறிக்கொண்டே சென்றார்.

அப்பொழுது தான் இவருக்கு தெரிந்தது, அந்த பூக்கள் உண்மையான பூக்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள் என்று.

இவர் யோசித்தார்.. "இந்த பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்..?"

இப்படி நினைத்த மறுவினாடியே அவருடைய அலர்ஜிக்குண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.

இது தான் நமதுமனம்..

இந்த மனதால் நோய்களை உருவாக்கவும் முடியும்.. குணப்படுத்தவும் முடியும்..

இந்த மனதால்

 பிரச்னையை உருவாக்கவும் முடியும்.. அதற்கு தீர்வையும் தர முடியும்.

எனவே,

நேர்மறை_எண்ணங்களை மட்டும் எண்ணி, மனதை நல்ல முறையில் பயன்படுத்துவோம்.

பொறுமையை விட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.  மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை.விவேகத்துடன் ஒவ்வொரு பிரச்சனைக்கும் முடிவு காண முயலுங்கள். இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!

நல்லதையே பேசுங்கள்...

விஸ்வாமித்திரரின் ஆஸ்ரமத்திற்கு வசிஷ்டர் வந்திருந்தார். இருவரும் பல விஷயங்களைப் பேசினர். வசிஷ்டர் விடை பெறும் போது விஸ்வாமித்திரர் அவருக்கு மறக்க முடியாத அன்பளிப்பு ஒன்றை வழங்க விரும்பி ஆயிரம் ஆண்டு தவத்தால் தனக்குக் கிடைத்த சக்தியை கொடுத்தார். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட வசிஷ்டரும் நன்றி சொல்லி புறப்பட்டார்.

இன்னொரு சமயத்தில் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு விஸ்வாமித்திரர் வர நேர்ந்தது. வசிஷ்டரும் அவரை அன்புடன் உபசரித்தார். புண்ணியம் தரும் ஆன்மிக விஷயங்களை மட்டுமே பேசினார். விடை பெறும்  நேரத்தில் வசிஷ்டரும் விஸ்வாமித்திரருக்கு அன்பளிப்பு வழங்க விரும்பினார்.

இவ்வளவு நேரம் நல்ல விஷயங்களை பேசியதற்கு கிடைத்த புண்ணிய பலனை உமக்கு அளிக்கிறேன் என்றார். இதைக் கேட்ட விஸ்வாமித்திரரின் முகம் சுருங்கியது.  “ நீங்கள் எனக்கு அளித்த ஆயிரம் ஆண்டு தவப்பயனுக்கு இந்த அரை நாள் நல்ல விஷயங்கள் பற்றி பேசிய புண்ணியமும் எப்படி சமமாகும் என்று தானே யோசிக்கிறீர்கள்? என்று கேட்டார்.  விஸ்வாமித்திரரும் தலையாட்டினார்.

எது உயர்ந்தது என்பதை நாம் பிரம்மாவிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று முடிவு செய்து பிரம்மலோகம் சென்றனர். பிரம்மாவிடம் நடந்ததை விளக்கினர். இது விஷயத்தில் தீர்ப்பு சொல்ல என்னால் முடியவில்லை. விஷ்ணுவிடம் முறையிடுங்கள் என்றார் பிரம்மா.

அவர்களும் விஷ்ணுவிடம் சென்று கேட்டனர். தவ வாழ்வில் என்னை விட சிவனுக்குத் தான் நிறைய அனுபவம் உண்டு. அவரிடம் விசாரித்தால் உண்மை விளங்கும் என்றார் விஷ்ணு.  கைலாயம் சென்று சிவனிடம் விளக்கம் தர வேண்டினர். சிவனும் உங்களுக்கு தெளிவு வேண்டுமானால் பாதாள லோகத்திலுள்ள ஆதிசேஷனின் உதவியை நாடுங்கள் என்றார். விஸ்வாமித்திரரும் வசிஷ்டரும் பாதாளலோகம் வந்தனர். தங்கள் சந்தேகத்தை எடுத்துக்கூறினர்.

இதற்கு யோசித்தே பதில் சொல்ல வேண்டும் அதுவரை இந்த பூலோகத்தை தாங்கும் பணியை நீங்கள் செய்யுங்கள் தலையில் சுமக்க கடினமாக இருக்கும் எனவே இதை ஆகாயத்தில் நிலை நிறுத்தி வையுங்கள் என்றார். உடனே விஸ்வாமித்திரர் நான் இப்போதே ஆயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் சக்தியை கொடுக்கிறேன் அதன் பயனாக பூமி ஆகாயத்தில் நிலைபெற்று நிற்கட்டும் என்றார். ஆனால் பூமியில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அது ஆதிசேஷனின் தலையிலேயே நின்றுகொண்டிருந்தது.

வசிஷ்டர் தன் பங்குக்கு அரைமணி நேரம் நல்ல விஷயங்களை பேசியதால் உண்டாகும் புண்ணியத்தை கொடுக்கிறேன் இந்த பூமி அந்தரத்தில் நிற்கட்டும் என்றார்   இதைச் சொன்னதும் ஆதிசேஷனின் தலையில் இருந்த பூமி கிளம்பி அந்தரத்தில் நின்றது. ஆதிசேஷன் பூமியை எடுத்து மீண்டும் வைத்துக்கொண்டு நல்லது நீங்கள் இருவரும் வந்த வேலை முடிந்துவிட்டது  போய் வரலாம் என்றார். கேட்ட விஷயத்திற்கு தீர்ப்பு சொல்லாமல் வழியனுப்பினால் எப்படி என்றனர் ரிஷிகள் இருவரும் ஒருமித்த குரலில்.

உண்மையை நேரில் பார்த்த பிறகு தீர்ப்பு சொல்வதற்கு ஒன்றுமில்லை  ஆயிரம் ஆண்டு தவசக்தியால் அசையாத பூமி அரைமணி நேர நல்ல விஷயங்கள் பேசிய பலனுக்கு அசைந்து விட்டது பார்த்தீர்களா?  நல்லவர் உறவால் கிடைக்கும் புண்ணியமே தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விட சிறந்தது என்றார் ஆதிசேஷன்.

சைக்கிள் சவாரி



அப்போதெல்லாம் வீட்டில் சைக்கிள் இருந்தாலே கெளரவமாகப் பார்க்கப்பட்டது.

அதிலும் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் பசங்க வந்தால்,
அவர்கள் பணக்கார வீட்டுப் பையன்கள் என்று எல்லோருமே சொல்லுவார்கள்.

இப்போது லோன் கிடைக்கிறது என்பதற்காக கார் வாங்கிவிட்டு, பிறகுதான் கற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால் அப்போது சைக்கிள் ஓட்டத் தெரியாமல்,
அப்பாக்கள் சைக்கிள் வாங்கித் தரமாட்டார்கள்.
’முதல்ல சைக்கிள் ஓட்டக் கத்துக்கோ. அப்புறம் பாக்கலாம்’ என்று பதில் வரும்.

சைக்கிளே இல்லாமல் எப்படி ஓட்டுவதற்குக் கற்றுக் கொள்வது..?

அதற்குத்தான் வாடகை சைக்கிள் கடைகள் இருந்தன.

இப்போதும்
உலக அதிசயமாக ஏதோவொரு ஊரில், இருக்கின்றன.
ஒருமணி நேரத்துக்கு அப்போதெல்லாம்  50 காசு அல்லது ஒரு ரூபாய் என்றிருக்கும்.
அதிலும் சின்ன சைக்கிள் கூட உண்டு.

கேரியர் வைத்த சைக்கிள்,
கேரியர்இல்லாத சைக்கிள்,
டைனமோ வைத்த சைக்கிள் என்று வாடகைக்கு விடுவார்கள்.

‘நோட்ல பேரும் டைமும் எழுதிக்கிட்டு எடுத்துட்டுப் போ..’ என்று விசிறிக்கொண்டே,
தாத்தாவோ பாட்டியம்மாவோ சொல்லுவார்கள்.

உடனே வாடகை சைக்கிள் எடுக்க வந்த சின்னப்பசங்க முதல் பலரும்
10.20 மணிக்கு சைக்கிள் எடுத்தால், 10.30 என்று எழுதுவார்கள்.
அந்த ஒரு பத்து நிமிஷம்,
இன்னும் கொஞ்சம் ஓட்டலாமே என்கிற ஆசையின் வெளிப்பாடுதான் அது..!

வாடகை சைக்கிள் எடுப்பவர்கள், நியூமரலாஜிப்படி அந்த எண் கொண்ட சைக்கிளை எடுப்பார்கள்.

’ஏழாம் நம்பர் வண்டி வெளியே போயிருக்குப்பா..’ என்று சொன்னால், அந்த சைக்கிள் வரும் வரைக்கும் காத்திருப்பார்கள்.

இன்னும் சில காமெடிகளும் நடக்கும்.

சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு,
தெரிந்தவரிடம் அல்லது நண்பரிடம் அல்லது உறவினரிடம் பணம் கேட்கச் செல்வார்கள்.

பணம் கிடைக்காத நிலையில், சைக்கிளை விடவும் பணமிருக்காது. அதற்காக, நான்கைந்து நாட்கள் சைக்கிளை வைத்துக்கொண்டு சுற்றுபவர்களும் உண்டு.
பிறகு பணம் வந்ததும் சைக்கிளை ஒப்படைப்பார்கள்.

‘செகண்ட் ஹேண்ட்’ சைக்கிள் வாங்கிவிட்டாலே பசங்களுக்கு தலைகால் புரியாது.

அந்த வண்டியைத் துடைப்பது என்ன, தேங்காய் எண்ணெய் தொட்டு பாலீஷ் போடுவதென்ன,
உப்புத்தாள் கொண்டு,  வீல்கள் இரண்டையும் தேய்த்து பளிச்சென்று ஆக்குவதென்ன...  என எப்போதும் சைக்கிள் பற்றிய நினைவுகளுடனேயே இருப்பார்கள்.

எண்பதுகளில் ராலே சைக்கிள்தான் கதாநாயகன்.
ராலே சைக்கிள் கமல் என்றால் ஹெர்குலிஸ் சைக்கிள் ரஜினி.

நடுவே, விஜயகாந்த், சத்யராஜ், மோகன் மாதிரி அட்லஸ், ஹீரோ என்றெல்லாம் சைக்கிள்கள் இருந்தன.

‘ராபின்ஹூட்’ என்றொரு சைக்கிள். அந்த ஹேண்டில்பாரில் இருந்து சீட் வரை உள்ள தூரம், கம்பீரம் காட்டும்.

பத்துமுறை பெடல் செய்தால், ஒரு கி.மீ. தூரத்தை சுலபமாகத் தொடலாம் என்று  அந்த சைக்கிள் வைத்திருப்பவர்கள் பந்தா காட்டுவார்கள்.

ஆனால் அந்த சைக்கிள் பாண்டிச்சேரியில்தான் கிடைக்குமாம்... என சொல்லிச் சொல்லி அலட்டிக்கொள்வார்கள்.

டைனமோ இல்லையெனில்  போலீஸ் பிடித்த காலமும் உண்டு. அபராதம் கட்டவேண்டும்.
அதேபோல்,
சைக்கிள் செயின் அடிக்கடி கழன்றுகொள்ளும் போது,
அதை மாட்டுவதற்கு முயற்சிக்கும் போது, கையெல்லாம் மையாகியிருக்கும்.

‘இந்த சைக்கிளுக்கு ஒரு விமோசனம் வரமாட்டேங்கிது..’ என்று அலுப்பும்சலிப்புமாக அந்த சைக்கிளுடனே பயணிப்பார்கள்.

‘ஓவராயிலிங்..’ சைக்கிள் மருத்துவத்துக்கு இதுதான் பெயர்.

அக்குவேறு ஆணிவேறு என கழற்றி ஆயிலில் ஊறப்போட்டு,
அதைத் தேய்த்து, சுத்தம் செய்து, திரும்பவும் பொருத்தி,
ஹேண்டில் பார் கைப்பிடி,  சீட்டுக்கு முன்னே இருக்கும்
பார் பகுதிக்கு ஒரு கவர்,  சீட்டுக்கு குஷன் கவர்,

இரண்டு வீல்களுக்கும் நடுவே கலர்கலராய் வளையம் என சைக்கிளுக்கு அழகுப்படுத்துவது  ஒரு கலை.

இன்னும் சிலர்,
சின்னச்சின்ன மணிகளை,
வீல் ஸ்போக்ஸ் கம்பிகளுக்குள் வரிசையாக கோர்த்து விடுவார்கள்.

 டைனமோவுக்கு மஞ்சள் துண்டு அல்லது
மொத்தமாக மெத்மெத்தென்று ஒரு கவர் என்று மாட்டுவார்கள்.

இப்போது எதற்கெடுத்தாலும் பைக்கை எடுக்கிறோம்.
கறிவேப்பிலை வாங்கவே,  டூவீலரை எடுத்துக்கொண்டுதான் செல்கிறோம்.

அப்போது சைக்கிளில் சிட்டாகப் பறந்து, எட்டெல்லாம் போட்டு, கெத்துக் காட்டுவோம்.

சைக்கிளின் ரெண்டுபக்கமும் பெல் வைத்து, வித்தியாச ஒலி எழுப்புவார்கள்.

மாற்றங்கள்...
வேகங்கள்..

சைக்கிளின் மதிப்பும் மரியாதையும் டூவீலர்களால் குறைந்துவிட்டன.

 ‘என்னடா மாப்ளே...
இன்னமும் சைக்கிளை ஓட்டிக்கிட்டிருக்கே.
இப்ப ஒரு சைக்கிள் நாலாயிரம் ரூபா.
இதுக்கு செகண்ட் ஹேண்ட்ல எக்ஸ் எல் சூப்பரே வாங்கிடலாம்’ என்றார்கள்.

அப்பா ஓட்டிய சைக்கிள்,
முதன்முதலில் வேலைக்குச் சென்ற போது வாங்கிய சைக்கிள் என்பதெல்லாம்
மியூஸியம் போல் வீட்டில் வைக்கப்பட்டு, பிறகு அவற்றுக்கு இடமில்லை என்று காயலான் கடைக்குப் போடப்பட்டன.

இப்போதெல்லாம் ஒரு வீட்டில், இரண்டு அல்லது மூன்று டூவீலர்கள் இருக்கின்றன.
அப்பாவுக்கு பைக்,
மனைவிக்கு ஆக்டீவா,
மகளுக்கு ஸ்கூட்டி என்று நிற்கின்றன.

குழந்தைகளுக்கும் பசங்களுக்கும் குட்டியூண்டு சைக்கிள் கூட பரிதாபமாகக் காட்சி தருகின்றன.

வாகனத்துக்கும் நமக்குமான பந்தமோ செண்டிமெண்டோ இப்போதெல்லாம் இல்லை.

’ரெண்டு வருஷத்துக்கு ஒருதடவை வண்டியை மாத்திட்டே இருப்பேன். அதான் நமக்குக் கையைக் கடிக்காது..’ என்று தோள் குலுக்கி புத்திசாலித்தனம் காட்டத் தொடங்கிவிட்டோம்.

காலச் சுழற்சியில்...
தொப்பையைக் குறைக்கவும்
சர்க்கரை அளவைக் குறைக்கவும் தினமும் சைக்கிளிங் செல்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள்.

ஸ்டாண்ட் போட்டு,
சைக்கிளிங் பண்ணுவதற்கு,
காத்தாட வண்டி ஓட்டலாம் என்று சைக்கிள் வாங்கத் தொடங்கிவிட்டார்கள்.

சைக்கிளுக்கும் நமக்குமான பந்தம்... பால்யத்தில் இருந்தே இரண்டறக் கலந்தது.
எத்தனை ராயல் என்பீல்டுகளும் யமஹாக்களும் இருந்தாலும்,
நமக்கும் நம் உடலுக்கும் எனர்ஜியையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிற சைக்கிளை, மறக்கமுடியுமா..?

உங்கள் நினைவுகளை கொஞ்சம் தட்டி விடுங்கள்....


சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...