கடமையா? வாய்மையா?பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும் ஓர் ஆண்டு காந்துறையும் அஞ்ஞாத வாசமும் முடித்துக் கொண்டு வெளிப்பட்டனர்.

துரியோதனன் சொன்னபடி நாடுதர மறுத்துவிட்டமையால், போர் தடுக்க முடியாததாகி விட்டது.

இருதரப்பினரும் போருக்குப் படை திரட்டலாயினர். பாண்டவர் உயலாவியம் என்னுமிடத்திலிருந்து படை திரட்டினர்.

பாண்டவர் தந்தை பாண்டு மன்னனுக்கு இரு மனைவியர். மூத்தவள் குந்தி. அவளுக்குத் தர்மன், வீமன், அர்ச்சுனன் என மூவர் புதல்வர். இரண்டாம் மனைவி மாத்திரி. அவளுக்கு நகுலன், சகாதேவன் என இரு புதல்வர்.

மாத்திரியின் உடன் பிறந்தவன் சல்லியன். அவன் பேராற்றல் படைத்தவன். வில்லாண்மையாலும் வாளாண்மையாலும் வேலாண்மையாலும் அவனை யாரும் வெல்ல இயலாது.

அந்தச் சல்லியன், தன் மருமக்களுக்கு உதவுவதற்காக உபலாவியம் நோக்கித் தன் பெரும்படைகளுடன் வந்து கொண்டிருந்தான்.

இச்செய்தி அறிந்த துரியோதனன், எப்படியாவது சல்லியனைத் தனக்கு உதவியாக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்று எண்ணினான்.

சல்லியன் நெடுந்தூரம் வந்தமையால், அவனும் அவன் படைகளும் சோர்ந்து போயினர். நடுவில் பெரிய பாலை நிலம் குறுக்கிவிடது. ஒரே வெய்யில் வெப்பக்காற்று வேறு புழுதிப்புயல் கண்ணை மறைத்தது.

படைவீரர் தாகத்தாலும் பசியரலும் துடிக்கலாயினர். நா உலர்ந்து நடைதளர்ந்தனர். நிழலே அருகில் தென்படவில்லை.தன் படைகள் சோர்ந்து போவது கண்டு, சல்லியன் வேதனையுற்றான். இன்னும் பாலை எவ்வளவு தூரம் உள்ளதென்றே தெரியவில்லை.

எப்படியோ மேலும் சிறிது தூரம் முன்னேறினான். என்ன அதிசயம் வழியில் ஒரு பெரிய பந்தல் தென்பட்டது. அளவு கடந்த தன் படைகளுடன் தங்குவதற்கு ஏற்றபடி விசாலமாக அந்தப் பந்தல் இருந்தது. சிலர் வந்து சல்லியனையும் அவன் படைவீரரையும் முகமன் கூறிப் பந்தலுக்குள் அழைத்துச் சென்றனர்.

முதலில் தாகத்துக்கு இளநீரும், மோரும் தந்தனர். யானைகளுக்கும் குதிரைகளுக்கும் தண்ணீரும் கரும்பும் அறுகம் புல்லும் குவிக்கப்பட்டிருந்தன.

சற்றுநேரத்தில் அறுசுவையுண்டி பரிமாறப்பட்டன. அனைவரும் உணவருந்திக் குளிர் நிழலில் இளைப்பாறினர்.

நடுப்பாலையிலே நண்பகலிலே கிடைத்த விருந்து உபசாரம் கண்ட சல்லியன் வியப்பாலும் மகிழ்வாலும் பரவசமானான்.

இத்தகைய அறச்செயலைக் காலத்தினால் செய்த அறவோன் யார்? அவன் எதன் பொருட்டு இந்த அறச்செயலை மேற் கொண்டான்? என்று சல்லியன் சிந்தனையில் ஆழ்ந்தான். அந்த அறவோளை அவன் மனமும் வாயும், வாழ்த்திக் கொண்டே இருந்தது.

“இந்த அறச்செயல் செய்த அறவோனுக்கு என் உடல், பொருள். ஆவி அனைத்தும் உதவினாலும் கைம்மாறு ஆகாது!” என்று அவன் வாய் அவனை அறியாமல் உரக்கக் கூறிவிட்டது.

உடனே அதுகாறும் மறைந்திருந்த துரியோதனன், சல்லி யனுக்கு முன்னே நின்றான்.

“மாமா! தங்கள் மருமகனாகிய நானே தங்களை உபசரிக்கும் இப்பேறு பெற்றேன். தாங்கள் தங்கள் உடல், பொருள், ஆவியும் எனக்கே தருவேன் என்றீர்கள் அல்லவா? 

வரப்போகும் போரில் எனக்குத் துணையாக நின்றால், அந்த உதவியே போதும். அதுவே நான் எதிர்பார்க்கும் கைம்மாறு” என்றான் துரியோதனன்.

விருந்துண்ட மகிழ்ச்சியில் தன்னை மறந்து கூறிய சொல், சல்லியனது கடமைக்கு மாறாக அமைந்துவிட்டதே!

மருமக்களுக்கு உதவுவதே மாமன் கடமை. இப்போது அக்கடமையைச் செய்ய முடியாமல், தன் வாய்மை தடுத்துவிட்டதே

கடமையா வாய்மையா என்ற பட்டிமண்டபம் நெடுநேரம் சல்லியன் மனத்தில் நிகழ்ந்தது. வாய்மையே பெரிது என்று அவன் மனம் தீர்ப்பளித்து விட்டது.

தன் பெரும் படையுடன் துரியோதனனுக்குப் போரில் உதவி செய்ய அத்தினபுரம் நோக்கிப் புறப்பட்டு விட்டான். போரில் துரியோதனனுக்காகவே தன் உயிரையும் கொடுத்தான்.

சல்லியன் வாய்மை காத்த செயல்கண்டு உலகமே போற்றியது. மருமகன் தருமன் முதலியோரும் தங்களுக்கு எதிராகப் போரிட்ட அவனை வெறுக்கவில்லை அவளைக் கொண்டாடவே செய்தனர். இந்த வரலாறு ஒரே செய்யுளில் வில்லிபுத்தூரார் சுருக்கமாகக் காட்டியுள்ளார்.

"இடைப்படு நெறியில் வைகும்
     இவனது வரவு கேட்டுத் 
தொடைப்படு தும்பை மாலைச் 
     சுயோதனன் சூழ்ச்சி யாக 
மடைப்படு விதியிற் செய்த
     விருந்தினால் மருண்டு, அவற்கே 
படைப்படு சேனை யோடும்
     படைத்துணை ஆயி னானே"
என்பதே அப்பாடல்.

Post a Comment

2 Comments

 1. I am sure this article has touched all the internet visitors, its really really nice post
  on building up new web site. I visited various sites but the audio quality for audio songs present at this website is genuinely excellent.
  Everyone loves it when people get together and share ideas.
  Great website, keep it up! http://Tagomi.com/

  ReplyDelete
 2. Hi there, I read yoᥙr blogs on a regular basis. Your humoristic style is aweѕome, ҝeep up the ɡooԁ
  work!

  ReplyDelete