முயற்சி

குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன் சோகமாய் இருக்கிறாய்’’ என்று கேட்டது.

குஞ்சுப் பறவை, ‘‘எனக்கு பிறரிடம் எதையும் கேட்பதற்கே கூச்சமாக இருக்கிறது’’ என்றது.

‘‘தேவையில்லாத வெட்கம் உன் வாழ்க்கையை சிறப்பில்லாததாக ஆக்கிவிடும்’ என்று தாய் எச்சரித்தது. குஞ்சு அதைக் கேட்டு, ‘‘சும்மா பொன்மொழியாக சொல்வது எளிது. செய்து காட்டுவது கடினம்’’ என்றது.

இதைக் கேட்ட தாய்ப்பறவை, தன் குஞ்சுப் பறவையை அழைத்துக் கொண்டு பறந்தது. ஏரிக்கரையோரம் சென்று பறந்தபடி, நீரின் அருகே எச்சமிட்டது. ஏரியில் ததும்பிய சிற்றலை, எச்சத்தை நீரில் கரைத்தது.

தாய்ப்பறவை ஏரியை அழைத்து, ‘‘எனக்கு என் எச்சம் வேண்டும். கொடுத்து விடு’’ என்றது. ‘‘அது என்னுள் கரைந்து போய்விட்டது. அதைத் திருப்பிக் கொடுக்க முடியாது. அதற்கு பதிலாக ஏரிக்குள் இருக்கும் மீன் ஒன்றைத் தருகிறேன்’’ என்றது ஏரி.

தாய்ப்பறவை அந்த மீனை எடுத்துக்கொண்டு பறந்தது. ஒரு வீட்டின் முன்னால் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் மறைந்திருந்தது.

வீட்டில் இருந்தவர்கள் மீனை எடுத்துச் சென்ற சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி, ‘‘என் மீன் எங்கே? எனக்கு அது வேண்டும்’’ என்றது. ‘‘அதைக் குழம்பு வைத்து சாப்பிட்டுவிட்டோம். அதற்கு பதிலாக நாங்களே தயாரித்த தரமான கயிறு தருகிறோம்’’ என்று கொடுத்தார்கள்.

தாயும் குஞ்சும் கயிறை எடுத்துக் கொண்டு பறந்தன. வழியில் ஒருவர் கிணற்றருகே கவலையுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தன. அவருடைய கிணற்றில் கயிறு இற்றுப் போய்விட்டதாம். ‘‘கயிறில்லாமல் நீர் இறைக்க முடியாது. நீர் இல்லாமல் போனால் என் வீட்டில் நடக்க இருக்கும் விழா நடக்காது’’ என்று புலம்பினார்.

‘‘நான் கயிறைக் கொடுத்தால் நீங்கள் என்ன தருவீர்கள்?’’ என்று தாய் கேட்டது.

‘‘என்னிடம் இருக்கும் அரிய வகை விதை நெல் ஒரு படி தருகிறேன். அது அழிந்து விட்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அழியவில்லை. என்னிடம் விதையாக கொஞ்சம் இருக்கிறது’’ என்றார் அவர்.

தாயும் குஞ்சும் விதைநெல்லை சுமந்துகொண்டு வயலுக்கு வந்தன. அங்கே அந்நாட்டின் ராஜா விவசாயத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார். அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம். அவர் அருகே விதை நெல்லைப் போட்டுவிட்டு தாயும் குஞ்சும் மறைந்தன. திரும்பி வந்தால் நெல் இல்லை.

ராஜாவிடம் தாய் கேட்டது, ‘‘என் அரிய வகை விதை நெல் எங்கே?’’

ராஜா திடுக்கிட்டு, ‘‘அந்த அரிய வகை விதை நெல் யாருடையது என தெரியாது. நான் அதைப் பயிரிடச் சொல்லிவிட்டேன். அது உன்னுடையதா? அதற்கு பதிலாக நீ என்ன கேட்டாலும் செய்கிறேன்’’ என்றார்.

ராஜாவின் அரியணையில் ஒரு மணி நேரம் அமர்ந்து அரசாட்சி புரியும் உரிமையை தாய்ப்பறவை கேட்டது. ராஜாவும் ஒரு மணி நேரம் அதை ஆட்சி செய்ய வைத்தார்.

அதிகாரத்தைப் பெற்றதும் தாய்ப்பறவை, ‘‘எங்கள் பறவை இனங்களுக்கு தேவையான உணவை இனிமேல் ராஜாவே கொடுக்க வேண்டும்’’ என்றொரு ராஜ கட்டளை பிறப்பித்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குஞ்சுப் பறவை அசந்துவிட்டது. ஒன்றுக்குமே உதவாத எச்சத்தில் ஆரம்பித்து நாட்டை ஆளும் அதிகாரத்தைப் கைப்பற்றி, தங்களுக்கான உணவுக்கும் வழி செய்த அம்மாவின் செயல்திறன் பற்றி பெருமைப்பட்டு புகழ்ந்து சொன்னது.

அதற்கு தாய்ப்பறவை, ‘‘நமக்கு இந்த உணவு வேண்டாம். ராஜாவிடம் சொல்லிவிடுவேன். நான் இதைச் செய்து காட்டியது உனக்கு புரிய வைக்கத்தான்.

ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்துகூட, கூச்சப்படாமல் கேட்கும் திறனால் பலவற்றை உருவாக்கிவிட முடியும்.

வெட்கப்படும் உயிரினங்களால் இவ்வுலகில் சிறப்பாக வாழ முடியாது. உனக்குத் தேவையானவற்றை கூச்சப்படாமல் உலகத்திடம் வாய்விட்டுக் கேள்.

கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் இஷ்டம். கேட்காமலேயே, ‘கொடுக்க மாட்டார்கள்’ என்று யூகம் செய்யாதே’’ என்றது.

                            --  திருமாறன் .இரா
                               (முதுகலை பட்டம்)

Post a Comment

0 Comments