கண்சிமிட்டும் விண்மீன்கள்

விண்மீன்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?
* * * * * * * *
உங்கள் நட்சத்திரம் எது ? என்றால் உடனே பதில் வரும். ஆனால் அது வானில் எங்கே இருக்கிறது? அதைப் பார்த்ததுண்டா?
தெரியாது என்றே பதில் வரும்.
பிறந்த உடனேயே இராசி நட்சத்திரம் பார்க்கும் நாம், நாள் தோறும் வானத்தைப் பார்த்தும் எந்த ஒரு விண்மீனின் பெயரையும் அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.
கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றுக் கல்லூரியில் வானியல் பாடம் பயிற்றும் பேராசிரியர் பலரும் வானில் உள்ள நட்சத்திரத்தைக் சுட்டிக் கேட்டால் தெரியாது என்கின்றனர்.
" பன்னிரண்டு ஆண்டுகள் கணிதம் பயிலுவர் வானில் ஒரு நட்சத்திரம் அறிகிலர்"--
என்று பாரதி வருத்தப்பட்டார். இன்றும் அதே நிலைதான்..
நம் தாத்தாக்கள் நட்சத்திரங்களின் இருப்பிடத்தை அறிந்திருந்தார்கள் அவற்றின் மூலம் இரவு நேரத்தில் காலத்தைக் கணித்தார்கள் . பருவகாலத்தை அறிந்து இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள். அவர்களிடமிருந்து அதைக் கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டோம்.
மேலை நாடுகளில் வானில் தெரியும் விண்மீன்களை அறிந்து கொள்ள ஆயிரக்கணக்கில் நூல்கள் உள்ளன.
அழகான தெரிவான விளக்கப் படங்களுடன் வயதுக்கேற்ப பல்வேறு வகையான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அதில் கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்தே நாம் நட்சத்திரக் கூட்டங்களை இனம் கண்டு கொள்ளலாம். Star atlas,star map Star finder என பல்வேறு நூல்கள் உள்ளன. குழந்தைகள் வேடிக்கையாக அவற்றை எளிதில் கற்றுக்கொள்கின்றன. நட்சத்திரங்களைப் பற்றிய கதைகளும் அழகான படத்துடன் விளக்கப்படுகின்றன.
நாம் நம் குழந்தைகளுக்கு இராசி நட்சத்திரம் பார்க்கின்றோம் ஆனால் அவை வானில் எங்கே உள்ளன என்பதையும் அவற்றில் உள்ள அறிவியலையும் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம்.
இராசி பலன் பார்க்கும் நாம் நம் குழந்தைகளுக்கு விண்மீன்ளைப் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டாவா?
இலக்கியங்கள் ,சோதிடநூல்கள் தனிப்பாடல்கள் கோயில் சிற்பங்கள் சோதிடவாய்பாடுகள் முதலானவை நட்சத்திரங்களின் வடிவங்கள் பற்றிக்குறிப்பிடுகின்றன அவற்றின் மூலம் விண்மீன்களை இனம்கண்டறிய முடியாது தெரிந்தவர்கள் சுட்டிக் காட்டினால்தான்.
மேலை நாட்டார் வெளியிட்டுள்ள வரைபடங்களை நாம் கையில் வைத்துக்கொண்டு நட்சத்திரக்கூட்டங்களைக் கண்டுமகிழலாம் (இராசி) .
தமிழர் சோதிடக்கலை இரண்டு கூறுகளைக்கொண்டது
1. வானியல் 2.ஆருடம்.
வானியல் அறிவியலை அடிப்படையாகக்கொண்டது.
ஆருடம் கருதல் அளவை கொண்டது. பலன் கூறுவது.
வானியலை ஏற்கிறேன்.
ஆருடத்தை நான் ஏற்பதில்லை.
நட்சத்திரங்களை அறிந்து கொள்ள தமிழில்
சிறு நூல்கள் சிலவே உள்ளன.
"விண்மீன்களைக் கண்டு ரசியுங்கள்" "கண்சிமிட்டும் விண்மீன்கள்" "சின்ன சின்ன விண்மீன்கள்" போன்ற சில நூல்கள் உள்ளன. இவை ஓரளவு பயன்படும்.

தமிழின் இளமை

அன்றைய நாள் கடைசிப் பாட வகுப்பில் இருந்தாள் அந்தத் தமிழ்ப் 
பேராசிரியை. பரணர் எழுதிய ஒரு புறநானூற்றுப்  பாடலை 
நடத்திக்கொண்டே வந்தவளுக்குத் திடீரென்று மனத்துக்குள் ஒரு 
கேள்வி தோன்றியது. அதற்கு விடையும் தெரியவில்லை. தமக்கு 
முந்தி யாராவது ஒரு மாணவி அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டால்? 
யோசித்துக்கொண்டிருக்கும்போதே வகுப்பு முடியும் மணி அடித்தது. 
அந்தத் தமிழ்ப்பேராசிரியைக்கு ஒரு நிம்மதி. நாளைக்குப் 
பார்த்துக்கொள்ளலாம். சில சமயங்களில் வகுப்பு முடியும்போது, 
மாணவர்களுக்கு இருப்பதைக் காட்டிலும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி 
அதிகம் கிடைப்பது வழக்கம். இது அந்தத் தமிழ்ப்பேராசிரியைக்கு 
அன்றைக்கு நடந்தது.
உடனடியாக வீட்டுக்குக் கிளம்பினாள் அந்தத் தமிழ்ப் பேராசிரியை. 
வீட்டில் கணவர் காத்துக்கொண்டிருப்பார். வீட்டிற்குச் சென்று அவர் 
வாங்கிவைத்திருக்கும் மாலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு 
அவருடன் உடனே வெளியே கிளம்பவேண்டும். ஊருக்கு 
ஒதுக்குப்புறமாக ஒரு விரிவாக்கப்பகுதியில் அவர்கள் 
வீடுகட்டிக்கொண்டிருந்தார்கள். அன்று முக்கியமான மேல் தளம் 
போடும் வேலை.நாள் முடியப்போகும் நேராமாதலால், வீட்டுவேலை 
மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. சித்தாள்கள் தலையில் சிமெண்ட் 
கலவையைச் சுமந்தவண்ணம் வேகமாகச் 
செயல்பட்டுக்கொண்டிருந்தனர். திடீரென்று கொத்தனார் ஒரு அதட்டுப் 
போட்டார். சித்தாளான ஒரு இளம்பெண்ணைப் பார்த்து “அதென்ன 
வாய்க்குள்ள? என்னத்தப்போட்டு அதக்கிக்கிட்டு இருக்க?” என்று 
அதட்டினார். அந்தச் சித்தாளின் கன்னம் ஒரு பக்கம் கொஞ்சம் 
புடைத்துக்கொண்டிருந்தது. ”அரிசி” என்று நன்றாக வாயைத்திறக்காமல் 
ஒரு முனகலாக அந்தச் சித்தாள் பதிலிறுத்தாள். “எத்தன தடவ 
சொல்லியிருக்கேன்? இன்னிக்குத் தளம் வேல. எவளும் அரிசி, கிரிசிய 
வாய்க்குள்ள ஒதப்பிக்கிட்டுத் திரியக்கூடாது’ன்னு. அத முழுங்கு, 
இல்லன்னா போய்த் துப்பிட்டு வந்து வேலயப் பாரு”
“என்ன கொத்தனாரே! இவங்களுக்கு டிபன் வாங்கித்தரல்லியா? ஏன் 
அரிசியத் திங்கிறாங்க?” என்றார் என் கணவர்.
“இந்தப் பொம்பளய்ங்களுக்கு இதே வேலைய்யா! பெரிசுக, 
வெத்தலையப் போட்டுக்கிட்டு, ‘புளிச் புளிச்’ன்னு எந்தநேரமும் 
துப்பிக்கிட்டே இருக்குங்க. சிறிசுக, அரிசி, அவல் இந்த மாதிரி 
எதையாவது வாய்க்குள்ளே ஒதுக்கிக்கிட்டே இருக்குங்க. வெத்தல 
போட்டா பரவாயில்ல. வாய்க்குள்ள இருக்குற அரிசி ஒண்ணுரண்டு 
சிந்திச்சுன்னா, இப்ப ஒண்ணும் தெரியாது. கொஞ்சநாள் கழிச்சு அது 
ஊறிப்போயி பூச்ச வெடிக்க வச்சிரும். அப்புறம் நீங்க என்னயக் 
கூப்பிட்டு “என்ன வேல பாத்திருக்கீங்க?” எம்பீங்க. இதுகளால நமக்கும் 
பொல்லாப்பு, வேலயும் கெட்டுப்போயிரும்.
அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த தமிழ்ப்பேராசிரியையின் முகம் 
மலர்ந்தது. “புரிஞ்சுபோச்சு” என்றாள் சன்னமாக. ஆச்சரியத்துடன் 
அவளைத் திரும்பிப் பார்த்த தன் கணவரிடம் “அப்புறம் சொல்றேன்” 
என்றாள் 
மெதுவாக.
சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு, அவர்கள் வீடு திரும்பினார்கள். அது 
விரிவாக்கப் பகுதியாதலால் சாலை இன்னும் போடப்படவில்லை. கார் 
மேடு பள்ளத்தில் ஏறி இறங்கி மெதுவாகவே வந்தது. இருப்பினும் 
ஓரிடத்தில் சட்டென்று நின்றுவிட்டது. மொத்தமாக அணைந்தும் 
விட்டது. எவ்வளவு முயன்றும் அது உயிர்பெறவில்லை. ”:ஏங்க, 
மெக்கானிக் இப்போ கிடைப்பாரா?” என்றாள் அவள் கவலையுடன். 
“பார்ப்போம் என்று சொன்னவன் கைபேசியில் யாருக்கோ அழைப்பு 
விடுத்தான். இடத்தைச் சொன்னான். “இருட்டுறதுக்குள்ள ஆள் 
வந்திருவான். நாம கொஞ்சம் இறங்கி நிப்போம்” என்றான் அவன். 
காரை விட்டு அவர்கள் இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தார்கள்.
அப்போது பக்கத்துக் குடிசையிலிருந்து இரண்டு சிறுவர்கள் - வயது 10, 
12 இருக்கும் - வெகு வேகமாக வெளியே ஓடிவந்து இவர்களை
 உரசிக்கொண்டு ஓடி மறைந்தனர். கையில் ஒரு குச்சியுடன் ஓர் 
இளம்பெண் குடிசையிலிருந்து வெளியே வந்தாள். சுற்றும் முற்றும் 
பார்த்தாள். கண்ணுக்கெட்டியவரை அவர்களைக் காணாததால், “ஓடியா 
போயிட்டீங்க? எங்க ஓடிப்போவீங்க? பசிச்சுன்னா மொக்கிக்கிற 
இங்கதான வரணும்” என்றவள் முந்தானையை ஒரு உதறு உதறி, 
இடுப்பில் செருகிய வண்ணம் வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.
இதைக் கேட்ட அந்தப் பேராசிரியை நன்றாகவே சிரித்தாள். “என்ன? 
ரொம்பப் புரிஞ்சிருச்சா? என்னமோ ஒன் மனசுல நினைப்பு ஓடிக்கிட்டே 
இருக்கு, அது ஒவ்வொண்ணாத் தெளிவாகுது. என்ன நான் சொல்றது 
சரியா?” என்றான் அவள் கணவன். தன் மனைவியின் மனப்போங்கு - 
சிந்தனை எப்போதும் தமிழைப் பற்றியே இருக்கும் அவளுக்கு என்பது - 
அவனுக்குத் தெரியாமல் இருக்குமா? ”வீட்டுக்கு வாங்க, சொல்றேன்” 
என்று அவள் சொன்னாள்.
சற்று நேரத்தில் காரைச் சரிசெய்பவர் வந்து பார்த்து, என்னென்னமோ 
செய்து காருக்கு உயிரூட்டிவிட்டார். அவர்கள் இருட்டும் முன்னரே வீடு 
வந்து சேர்ந்தனர். வந்ததும், சாய்விருக்கையில் ஓய்வாகச் சரிந்தவன், 
தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினான். அவள் அறைக்குள் 
உடைமாற்றச் சென்றாள். தொலைக்காட்சிப் பெட்டியில் ஏதோ ஒரு 
நிகழ்ச்சியில், ஒரு பேராசிரியை நாட்டுப்புறப்பாடல் ஒன்றை உரக்கப் 
பாடிக்கொண்டிருந்தார். அவன் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு மாறினான். 
உள்ளேயிருந்து வேகமாக வந்த அவள், “ஏங்க, அந்த நாட்டுப்புறப் 
பாடலை மறுபடியும் போடுங்க” என்றாள். ”அந்தம்மா பாடி 
முடிச்சிருப்பாங்க” என்றான் அவன்.. “இல்ல, திரும்பத் திரும்ப அதப் 
பாடுவாங்க, நீங்க முதல்ல அதப் போடுங்க” என்று அவனை அவள் 
அவசரப்படுத்தினாள். அரைமனதாக அவன் அந்த நிகழ்ச்சியை மீண்டும் 
திரைக்குக் கொண்டுவந்தான். அந்தப் பாடல் மீண்டும் ஒலித்தது.
’தத்திங்கம் தத்திங்கம் கொட்டுவாளாம்

தயிரும் சோறும் திம்பாளாம்

ஆப்பம் சுட்டால் தின்னுவாளாம்

அவல் இடிச்சால் மொக்குவாளாம்’
அப்படியே பாடலை உள்வாங்கிக்கொண்ட அவள், அவன் அருகில் 
அமர்ந்தாள். “சில நாட்கள்ல நாம நினைச்சது ஒவ்வொண்ணாத் 
தட்டிக்கிட்டே போகும், ஆனா, சில நாட்கள்ல நாம நினைக்காததுகூட 
ஒவ்வொண்ணா எதிரே வந்துகிட்டே இருக்கும்” என்று சொன்ன 
அவளின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவன், இன்றைக்கு ஒரு 
நல்ல கதை கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் ஆர்வத்துடன் 
அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் சொல்ல 
ஆரம்பித்தாள்.
”இன்றைக்குக் கடைசி வகுப்புல பாடம் எடுத்துக்கிட்டு இருந்தேன். 
புறநானூற்றுல பரணர் எழுதிய பாடல். பாடல் 63. ரெண்டு பெரிய 
வேந்தர்கள் சண்டைபோட்டுக்கிட்டு இருக்கிற போர்க்களம். ரெண்டு 
பக்கமும் பெரிய அழிவு, சேதம். ’இந்த ரெண்டு பேரு வீம்புனால 
எத்தனை பெரிய இழப்பு! இனிமேல் இந்த ரெண்டுபேரின் நாடுகளும் 
என்ன ஆகுமோ’, அப்படீன்னு சொல்ல வந்த புலவர், ஒரு இயற்கைக் 
காட்சியைக் காண்பிக்கிறாரு.
என்னாவது-கொல் தானே, கழனி

ஆம்பல் வள்ளி தொடிக்கை மகளிர்

பாசவல் முக்கி தண் புனல் பாயும்

யாணர் அறாஅ வைப்பின்

காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே’
இதுக்கு அர்த்தம்,
என்ன ஆகுமோ? வயலில் இருக்கும்
ஆம்பல் தண்டினால் செய்த வளையலை அணிந்த கையையுடைய 

பெண்கள்மிக நல்ல அவலை வாய் நிறைய வைத்துக் கொண்டு 
குளிர்ந்த நீரில் பாய்ந்து குளிக்கின்ற, எப்போதும் புதுமை பொங்க 
விளங்கும் ஊர்களின் அழகிய இடங்களையுடைய இந்த வேந்தர்களின் 
பெரிய நாடுகள்.

(என்ன ஆகுமோ?)
முதல்ல வந்த சந்தேகம், இந்தப் பெண்கள் ஏன் அவலை வாய் நிறைய 
வச்சுக்கிட்டு இருக்காங்க? அந்த சந்தேகம் நம்ம வீடு கட்டுற இடத்துல 
தீர்ந்துபோச்சு.
“எப்படித் தீர்ந்துச்சு?” அவன் இடை மறித்தான்.
“அதாங்க, அந்த சித்தாள் வாயில அரிசிய ஊறவச்சுக்கிட்டு இருந்தது. 
இதுதான் தமிழ்நாட்டு இளம்பெண்கள் வழக்கம். அன்னக்கி இருந்து 
இன்னிக்கி வரை தொடர்ந்து வருது”
அடுத்து வந்த சந்தேகம், இந்தப் பெண்கள் அவலை வாயில அடக்கி 
வச்சுக்கிட்டு இருக்குறத புலவர் சொல்றாரு, ’மகளிர் பாசவல் முக்கி’. 
இந்த முக்கு அப்படீங்குற சொல்ல நமக்குத் தெரியும். ஒருத்தன் 
கஷ்டப்பட்டு ஒரு வேலை செஞ்சான்னா, ‘ஏண்டா, இந்த முக்கு 
முக்குற?’ அப்படீங்குறோம். அடுத்து, தண்ணிக்குள்ள ஒண்ண முழுசா 
அமுக்குனா, அதத் தண்ணிக்குள்ள முக்குறது’ன்னு சொல்றோம். இவரு 
வாய்க்குள்ள ஒண்ண நெறயா அடச்சுவச்சா, அத முக்குறது’ன்னு 
சொல்றாரு.
“யாரு?” அவன் மீண்டும் இடைமறித்தான்.
“இந்தப் பாட்டு எழுதின புலவர்தான். பாடல்ல அப்படி வருது. இதத்தான் 
நாம இப்போ மொக்குறது-ங்கிறோம். அந்தக் குடிசைக்காரப் பொண்ணு 
சொன்னாளே நெனைவிருக்கா, நான்கூட கேட்டுட்டிச் சிரிச்சேனே! 
ஓடிப்போன தம் பிள்ளங்களப் பாத்து அவ சொன்னாளே! - ’ஓடியா 
போயிட்டீங்க? எங்க ஓடிப்போவீங்க? பசிச்சுன்னா மொக்கிக்கிற 
இங்கதான வரணும்’
        
            வக்கனையா சோத்த பொங்கி ஆக்கி வெச்சாக்கா
            தினம் முக்குவியே மூக்கு முட்ட மிச்சம் வைக்காமே
            மூக்காலே மூணு வேள தின்னு கொழுத்தே.....

”வாய் நெறயா வச்சு அமுக்குறத நாம மொக்குறது என்கிறோம். அது 
உண்மையில முக்குறது-தான். அது சங்க காலத்துச் சொல். முக்கு 
அப்படிங்கிறதுக்கு அது மூணாவது பொருள். இப்ப ரெண்டாவது 
சந்தேகமும் தீர்ந்துபோச்சு.
”எனக்குக் கொஞ்சநஞ்சம் இருந்த சந்தேகத்தையும் இந்தத் 
தொலைக்காட்சிப் பெட்டி நாட்டுப்புறப் பாடல் தீர்த்துவச்சுருச்சு.
’ஆப்பம் சுட்டால் தின்னுவாளாம்

அவல் இடிச்சால்? -----  மொக்குவாளாம்!!’
”முதல் சந்தேகம் அவலப் பத்தி. ரெண்டாவது சந்தேகம் முக்கு அல்லது 
மொக்குறதப் பத்தி. இந்த ரெண்டயும் தீத்துவச்சது இந்த 
நாட்டுப்புறப்பாடல். ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னால எழுதின 
ஒரு சங்க காலப் பாடல்ல சொன்ன இந்த அவல் முக்குறது, இப்ப 
இருக்கிற நாட்டுப்புறப் பாடல்ல இருக்கு பாத்தீங்களா?”
அவள் சொல்லி முடிக்க அவளைப் பெருமையுடன் பார்த்த அவன் 
சொன்னான், “இன்னிக்கு இரவுச் சாப்பாடு அவல் உப்புமா, நான் ஒரு 
மொக்கு மொக்கப்போறேன்”
பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு 
தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்! என்னே தமிழின் இளமை!

  நன்றி :- முனைவர்.ப.பாண்டியராஜா

ஈயும் தேனீயும்

சிற்றின்பம், பேரின்பம் என்றால் என்ன என்பதை ஓர் கதை முலம் பார்க்கலாம்.

ஒரு ஈயும், தேனீயும் ஒரு நாள் வழியில் சந்தித்துக் கொண்டன. ஈ , தேனீயிடம் கேட்டது -நண்பா , சாப்பிட்டு விட்டாயா ?
தேனீ சொன்னது ," இல்லை நண்பா , அதற்காகத்தான் பூக்களைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன்.தேனீயின் பதிலைக் கேட்ட ஈ விழுந்து விழுந்து சிரித்தது . 
பூமி முழுக்க சுவையான உணவுகள் இறைந்து கிடக்க நீ பூக்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாயே....? 

உனக்குக் கண்களில் கோளாறா இல்லை புத்தியில் கோளாறா....? 

அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் கண் முன்னே கொட்டிக் கிடக்க அரிதான விஷயத்தைத் தேடி இவ்வளது தூரம் அலைந்து கஷ்டப்படுகிற உன்னைப் பைத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும் " 
என்றது.

தேனீ கோபப்படவில்லை.
உன் கண்களுக்கு இனிய உணவாகவும், 
இன்ப மயமாகவும் காட்சியளிக்கும் சகலமும் , எனக்கு நாற்றம் பிடித்தவையாகவும், 
அருவறுக்கத் தக்கவையாகவும் தோன்றுகிறதே 

நான் சேமித்து வைக்கும் என்னுடைய உணவு ஆண்டுகள் பல ஆனாலும் அதே சுவையோடு அப்படியே இருந்து பல பேருக்குப் பயன்படும்.

ஆனால் உன்னுடைய உணவு, 
கொஞ்ச நேரத்திலேயே அழுகிப் புழுத்து அழிந்து போகும். 

அத்துடன் உன்னுடைய கூட்டம் மட்டுமே அந்த நாற்றத்தைத் தேடிப் போகும் " என்றது. 

ஈ அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் ஓடிப் போனது .

பாவங்களை இன்பமாய்க் கருதி வாழும் பிறவிகளின் கண்களுக்குப் பரிசுத்தவான்கள் பைத்தியங்களாய்த் தோன்றுவது இயற்கைதான்.
 
சிற்றின்பம் ஈ தேடுவது பேரின்பம் தேனி தேடுவது.....

சுயநலம்!

பெரியவர் ஒருவர், அந்தப் பெண்ணின் அழகில் மகிழ்ந்து
அவள்தான் தன் மகனுக்கு ஏற்ற பெண் என்ற முடிவிற்கு வந்து,
அவளுடன் பேசத்துவங்குவார். அவர் அவளுடைய உறவினர்.ஆகவே
அந்த மங்கை நல்லாளும் தயக்கமின்றி அவர் கேள்விகளுக்குப் பதில்
சொல்வாள்.

தன் சட்டைப் பையில் இருந்து ஒரு ஒற்றை ரூபாய் நாணயத்தைத் தன்
விரல்களால் சுண்டி விட்டுப் பிடித்து உள்ளங் கைகளிக்கிடையே
மறைத்து வைத்துக் கொண்டு கேட்பார்:

“பூவா? தலையா? சொல்லம்மா பார்க்கலாம்?”

பெண் முகம் மலர்ந்து சொல்வாள்:

“பூ!”

அவர் தனது கைகளைத் திறந்து காட்டுவார். என்ன ஆச்சரியம்?

வந்தது பூ தான்.

உடனே பெரியவர் சொல்வார்.” வந்தது பூ; நீ தான் என்னுடைய மருமகள்!”

அந்தப் பெண் அவரை மடக்கும் விதமாகக் கேள்வி கேட்பாள்

“தலை விழுந்திருந்தால் என்ன சொல்வீர்கள்?”

“நான்தான் உனக்கு மாமனார்!”

அவருடைய சாமர்த்தியத்தைப் பாருங்கள்.

பூ விழுந்ததால் அவள்தான் மருமகள் என்றவர், தலை விழுந்திருந்தால்
நான்தான் உன்னுடைய மாமனார் என்றிருப்பாராம். எது விழுந்தாலும்
தான் தான் ஜெயிக்க வேண்டும் என்னும் தன்முனைப்பின் வெளிப்பாடு அது!

இப்படித்தான் எல்லா மனித மனமும் வெற்றி கொள்ள விழையும்

அதை இயற்கை என்று சொல்லிவிட முடியாது.

அது சுயநலம்!

மனிதனுடைய முதல் விரோதியே இந்தச் சுயநல மனப்பானைதான்

இரண்டாவது விரோதி சோம்பல்; மூன்றாவது விரோதி பய உணர்வு!

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

சரி, ஒவ்வொன்றாக வருவோம்!

சுயநலத்தை மூன்றாகப் பிரிக்கலாம்.

1. ஏதாவது வேலை என்றால், அதில் தன் பங்கு என்ன என்று தெரிந்து
கொண்டு, (what is stored in it for me?) அதைச் செய்ய ஒப்புக்
கொள்வது முதல் வகைச் சுயநலம்!

2. இரண்டாவது வகை சற்றுக்  கிறுக்குத்தனமானது!
நீ அவல் கொண்டு வா. நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும்
கலந்து வைத்துக் கொண்டு ஊதி ஊதித் தின்போம். என்னுடைய ஈடுபாடு
குறைவாக இருக்கும். உன்னுடைய ஈடுபாடு அதிகமாக இருக்க வேண்டும்
என்னும் அழிச்சாட்டியம்

3. மூன்றாவது வகை இருப்பதிலேயே மோசமானது. தலை விழுந்தால்
நான் ஜெயிப்பேன். பூ விழுந்தால் நீ தோற்பாய். அதாவது எப்படியும்
நான்தான் ஜெயிக்க வேண்டும்

இந்த மூன்று வகை ஆசாமிகளையும் நான் பார்த்திருக்கிறேன். நீங்கள்
பார்த்திருக்கிறீர்களா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்

நீங்கள் யாருடன் வேண்டுமானாலும் இணைந்து செயல் படலாம்.
ஆனால் இந்தச் சுயநலம் அதிகம் உடையவர்களுடன் இணைந்து
சில காலத்திற்கு மேற் செயல்பட முடியாது.”சீ” என்றாகி விடும்.
அவர்களைக் கண்டாலே வெறுத்து ஒதுங்கும் நிலை ஏற்பட்டுவிடும்

மாற்றம் என்பது...

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. 

 "அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு
      அவனுடையது தான். .

"அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை
     கொடுத்து வாங்க பலரும் தயாராக
     இருந்தனர். ஆனால் இவன்
     விற்கவில்லை.  

 "இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே
     எரிந்துகொண்டிருந்தது. 

"ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை
     பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  தீ
     முழுவதுமாக பரவிவிட்டதால் அதை
     அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று
     எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .

வணிகனோ செய்வதறியாமல் கண்ணில்
     நீரோடு புலம்பிகொண்டிருந்தான். 

"ஐயோ என் வீடு ! என் வீடு ! என்று
     அலறினான்.

"அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து
    ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே
    ஏன் அழுகிறீர்கள் ? 

 "இந்த வீட்டை நான் நேற்றே மூன்று
     மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். .

"இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று
     கூறினான். 

 "இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. 
 "அவனது சோகம் அனைத்தும் மறைந்து
     மகிழ்ச்சி உண்டானது. 

" இப்போது வணிகனும் கூடி இருந்த
     கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை
     பார்க்க தொடங்கினான். 

" அதே வீடு தான் " ,
 " அதே நெருப்பு தான் " ,

"ஆனால் சில வினாடிகளுக்கு முன்
    இருந்த தவிப்பும் சோகமும் இப்போது
    அவனிடம் இல்லை.

 "" சிறிது நேரத்தில் வணிகனின்
    இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே
    ஏன் இப்படி கவலையில்லாமல்
    சிரிக்கிறீர்கள்?  நாங்கள் விற்ற இந்த
    வீட்டிற்கு முன்பணம் மட்டுமே
    வாங்கியுள்ளோம்.  முழு தொகை இன்னும்
    வரவில்லை. 

"வீட்டை வாங்கியவன் இப்போது மீதி
    பணத்தை தருவானா என்பது சந்தேகமே”
    என்றான். .
 "இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி
    அடைந்தான். மீண்டும் சோகத்தில்
    ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப
    ஆரம்பித்தான். 

 "தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம்
    மீண்டும் அவனை வாட்டியது.

"சில மணித்துளிகள் பின்பு வணிகனின்
    மூன்றாவது மகன் ஓடி வருகிறான்.
    “தந்தையே கவலை வேண்டாம். இந்த
    வீட்டை வாங்கிய மனிதன் மிகவும்
    நல்லவன் போலும். 

 "இந்த வீட்டை வாங்க அவன் முடிவு
    செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று
    உங்களுக்கும் தெரியாது எனக்கும்
    தெரியாது. 

 "ஆகையால் நான் பேசியபடி முழு
     தொகையை கொடுப்பது தான் நியாயம்
     என்று என்னிடம் இப்போது தான் சொல்லி
     அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு
     தெரிவித்தான். 

"இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம். 

 "கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும்
    மீண்டும் காணாமல் போய்விட்டது. 

"மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று
    வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
 " இங்கு எதுவுமே மாறவில்லை 
" அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு ",

 " இது என்னுடையது என்று நினைக்கும்
    போது அந்த இழப்பு உங்களை சோகத்தில்
   ஆழ்த்துகிறது. 
" இது என்னுடையது அல்ல என்று
    நினைக்கும் போது உங்களை சோகம்
    தாக்குவது இல்லை. .
"உலகில் எதுவுமே நிரந்தரமானது
     இல்லை. 

" ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது
    இல்லை. அனைத்துமே அழிய கூடியது. 

 "நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட
    காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது
    வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது

இதைத்தான் அனைத்து மதமும்   சொல்கிறது

எதை நீ இழந்தாய்... எதற்காக அழுகிறாய்...
இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது...
மாற்றம் என்பது மட்டுமே மாறாதது....
கடமையை செய்... பலனை எதிர்பாராதே... ஏனெனில் கடமைக்கான பலனை  இறைவன் தர மறப்பதில்லை
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அன்பாய் இருப்போம்..
பண்பாய் இருப்போம்..
அழிவிற்குப் பின்னும்
அனைவரின் நெஞ்சில் நீங்காமலிருப்போம்...

மனித குணங்கள்

ஆசிரமம் ஒன்றில் முற்றும் துறந்த சந்நியாசி ஒருவர் இருந்தார்.
அவருக்கு நான்கு இளம் சீடர்கள் இருந்தார்கள்.

முற்றும் துறந்தவருக்கு எதற்கு ஆசிரமம்? எதற்கு சீடர்கள்?
என்கிறீர்களா. அதுவும் சரிதான். அதை எல்லாம் நானும் கேட்டுக்
கொண்டிருந்தால் கதையை எப்படி நகர்த்துவது?

சில விஷயங்களைக் கேட்காமல் கருத்தை மட்டும் பார்ப்பதுதான்
நமக்கு நல்லது. ஆகவே கதைக்கு வருகிறேன்.

அசிரமத்தின் அன்றாடத் தேவைகளை, அந்த ஆசிரமத்தின் மேல்
மதிப்பு வைத்திருந்த - உங்கள் மொழியில் சொன்னால் அந்த
ஆசிரமத்தின்மேல் பிடிப்பு அல்லது காதல் கொண்டிருந்த உள்ளூர்
மக்கள் பார்த்துக் கொண்டார்கள்.

ஆசிரமம் செழிப்பாக இருந்தது. காலையிலும், மாலையிலும் சாமியார்,
மக்களை நல்வழிப்படுத்தும் முகமாக உரை நிகழ்த்துவார். கூட்டு
வழிபாடு செய்வார்.

ஒரு நாள், அந்த நான்கு சீடர்களில் மூன்று பேர்கள் சாமியாரிடம்
வந்து,” ஐயா நாங்கள் அருகிலிருக்கும் புண்ணிய நதிகளிலும், நீர்
நிலைகளிலும் தீர்த்தமாடிவிட்டுவர ஆசைப் படுகிறோம். அனுமதி
கொடுங்கள்” என்றார்கள்

”ஏன் நம்மூர் ஆற்றிற்கு என்னாயிற்று?” என்று கேட்டார்.

”அதில்தான் தினமும் நீராடிக்கொண்டிருக்கிறோமே! ஒரு மாறுதலுக்காக
மற்ற புண்ணிய நதிகளிலும் நீராடிவிட்டுவர விரும்புகிறோம்” என்றார்கள்.

“சென்று வாருங்கள்” என்றார்.

அவர்களில் ஒருவன்,”ஐயா நீங்களும் வர வேண்டும்!” என்றான்.

“இல்லை, நீங்கள் மட்டும் சென்று வாருங்கள்!” என்றார்

மற்ற இருவரும் இப்போது அவனுடன் சேர்ந்து வலியுறுத்தவே, சாமியார்
சுற்று முற்றும் பார்த்தார்.

அருகில் இருந்த பாகற்காய் கொடியில் நிறையக் காய்கள் காய்த்துத்
தொங்கிக் கொண்டிருந்தன.

அவற்றில் ஒன்றைப் பறித்து அவர்களிடம் கொடுத்தவர், இப்படிச் சொன்னார்:

“இந்தக்காயை நான் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீராடும்
இடங்களில் எல்லாம் இதையும் மூன்று முறைகள் நமச்சிவாயா என்று
சொல்லி நீரில் முக்கி எடுத்துக் கொண்டு வாருங்கள்”

அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். உள்ளூர் ஆசாமி ஒருவன் அவர்களுக்கு
வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான். இரண்டு நாட்கள்
பயணம் மேற்கொண்டு நான்கு நதிகளில் நீராடிவிட்டுத் திரும்பினார்கள்.

திரும்பி வந்தவுடன், சாமியாரை நெடுஞ்சான் கிடையாக விழுந்து
வணங்கினார்கள்.

சாமியார் கேட்டார்,”பாகற்காய் என்ன ஆயிற்று?”

“நீங்கள் சொன்னபடியே பாகற்காயையும் நீராட்டிக் கொண்டு வந்திருக்கிறோம்”

“இன்று அதைச் சமையலில் சேர்த்து விடுங்கள்” என்றார் அவர்.

அப்படியே செய்தார்கள்.

மதியம் சாப்பிடும்போது, சாமியார் கேட்டார்,” பாகற்காயில் ஏதாவது
மாறுதல் தெரிகிறதா?”

சீடர்கள் மூவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்,” இல்லை ஐயா,
எப்போதும் போல அது கசப்பாகத்தான் இருக்கிறது!”

இப்போது சாமியார், அவர்களுக்குப் புரியும்படியாக அழுத்தமான குரலில்
சொன்னார்.

“எத்தனை புண்ணிய நிதிகளில் முக்கி எடுத்தாலும் பாகற்காயின் குணம்
போகவில்லை அல்லவா? அதுபோலத்தான் எத்தனை புண்ணிய நதிகளில்
நீராடினாலும் அல்லது எத்தனை ஆலயங்களில் வழிபட்டாலும் மனிதனின்
இயற்கைக் குணம் மாறாது!”


ஆமாம் மனிதனின் இயற்கைக் குணம் என்றுமே மாறாது.

அதைப் பிறவிக் குணம் என்பார்கள்

அதை வலியுறுத்திச் சொல்லவே இந்தக் கதை.

மிளகாய் என்றுமே மிளகாய்தான்
மாங்காய் என்றுமே மாங்காய்தான்
புளியங்காய் என்றுமே புளியங்காய்தான்

எத்தனை இனிப்புப் போட்டுச் சமைத்தாலும் அவற்றின் இயற்கைத் தன்மை மாறாது!

அதுபோல கஞ்சன் என்றுமே கஞ்சன்தான். எத்தனை செல்வம் வந்தாலும்,
அந்தக் கஞ்சத்தன்மை மாறாது. அதுபோல காமுகன் என்றும் காமுகன்தான்.
எத்தனை பெண்களை அவனுக்குக் கட்டிவைத்தாலும் அவன் திருந்த
மாட்டான். உலகில் உள்ள அத்தனை அழகான பெண்களையும்
அவனுக்குக் கட்டி வைப்பதாகச் சொன்னாலும், தேவமங்கைகள் என்று
சொல்கிறார்களே, அவர்கள் கிடைப்பார்களா? என்றுதான் கேட்பான்.

அதுபோல கோபம், சோம்பேறித்தனம், பொறாமை, படபடப்பு, பிடிவாதம்
என்றுள்ள பல மனித குணங்கள் பிறவியிலேயே வருவது. அது என்றுமே
மாறாதது. மனிதன் செத்துச் சாம்பலாகும் வரை அவனுடனேயே இருப்பது.

எந்தக் கொம்பனாலும் அவற்றை மாற்ற முடியாது. அல்லது மாற்றிக் கொள்ள
முடியாது.

ஏன் அப்படி?

அதுதான் வாங்கி வந்த வரம்!

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...