தயிர் Curd

*தயிர் + சர்க்கரை பயன்கள்* தினமும் காலையில் ஒரு பௌல் தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!!

இந்தியர்களின் தினசரி உணவில் இடம் பெறும் முக்கியமான ஒரு உணவுப் பொருள் தான் தயிர். பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் தயிர் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கின்றன.

வடஇந்தியாவில் ஒரு பழக்கம் உள்ளது. அது வெளியே ஒரு நல்ல காரியத்திற்கு செல்லும் போது, அந்த காரியம் வெற்றிகரமாக நடக்க தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டுவிட்டு வீட்டில் இருந்து கிளம்புவார்கள். இன்னும் இந்த பழக்கம் நடைமுறையில் உள்ளது.

அதேப் போல் கர்நாடகாவில் உள்ள ஹோட்டல்களில் மதிய உணவின் போது தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடக் கொடுப்பார்கள். ஏனெனில் தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் போது, உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன.

ஆனால் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட சிறந்த நேரம் என்றால், அது காலை வேளை தான். இப்போது காலையில் ஒரு பௌல் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

குடல் ஆரோக்கியம் மேம்படும் :

தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அதுவும் தயிரை காலையில் சாப்பிடும் போது, அது குடலுக்கு இன்னும் நன்மை அளிக்கிறது. அதுவும் இது வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவி புரிந்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. நல்ல பாக்டீரியாக்களானது பொதுவான வயிற்று பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பளிப்பதோடு, குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

சிறுநீர் பாதை தொற்றிற்கு நல்லது :

சிறுநீர் பாதை தொற்று பெண்களிடையே காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனை. இது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்வடிகுழாயை பாதிக்கிறது. சிறுநீர் பாதை தொற்றினால் பாதிக்கப்படும் போது, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சலை சந்திக்க நேரிடும்.

ஆனால் காலையில் வெறும் வயிற்றில் ஒரு பௌல் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், இந்த எரிச்சலுணர்வைக் குறைக்கலாம். ஏனெனில் தயிர் சிறுநீர்ப்பையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தயிரில் வைட்டமின் ஏ, ஈ, சி, பி2, பி12 மற்றும் கரோட்டினாய்டு போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாத சத்துக்களாகும். நீங்கள் குறைவாக நீரைக் குடிப்பீர்களானால், தினமும் காலையில் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

எளிதில் செரிமானமாகும் :

என்ன தான் பாலில் இருந்து தயிர் பெறப்பட்டாலும், பாலை விட தயிர் வேகமாக செரிமானமாகும் என்பது தெரியுமா? தயிரில் உள்ள புரோட்டீன் எளிதில் செரிமானமாகக்கூடியவை. எனவே காலை உணவின் போது பாலுக்கு பதிலாக தயிரை சேர்த்துக் கொள்வது நல்லது.

உடனடி ஆற்றல் கிடைக்கும் :

நாள் முழுவதும் உடல் ஆற்றலுடன் இஇருக்க வேண்டுமானால், உடலுக்கு போதுமான அளவு க்ளுக்கோஸ் அவசியம் தேவை. சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கக்கூடியவை. அப்படிப்பட்ட சர்க்கரையை ஒரு பௌல் தயிருடன் சேர்த்து காலையில் உட்கொள்ளும் போது, உடலின் ஆற்றலுக்கு வேண்டிய க்ளுக்கோஸ் கிடைத்து, நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்படலாம்.

உடல் குளிர்ச்சியாக இருக்கும் :

நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல், அஜீரண கோளாறு, அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்தித்து வந்தால், தினமும் உணவில் தயிரை சேர்க்க வேண்டும். அதுவும் காலையில் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், அனைத்துவிதமான செரிமான பிரச்சனைகளும் தடுக்கப்படுவதோடு, வயிறும், உடலும் குளிர்ச்சியாக இருக்கும். ஒருவரது செரிமானம் சிறப்பாக இருந்தால், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே உங்கள் உடல் ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டுமானால், தினமும் காலையில் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள்.

மனதில் கொள்ள வேண்டியவை
என்ன தான் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது நன்மையளித்தாலும், சிலருக்கு இது மோசமான விளைவை ஏற்படுத்தும். அதுவும் ஏற்கனவே சளி, இருமலால் அவதிப்படுபவர்கள் இதை உட்கொள்ளும் போது, நிலைமை இன்னும் மோசமாகும்.

அதேப் போல் சர்க்கரை நோயாளிகள் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், அது சட்டென்று இரத்த சர்க்கரைஅளவை அதிகரித்துவிடும். இது தவிர உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சர்க்கரையில் கலோரிகள் அதிகமாக உள்ளன.

Post a Comment

0 Comments