குரு சிஷ்யன்
பஞ்ச பூதம்
விளக்கம்,,,

குரு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

பஞ்ச பூதங்களிலும் பகவான் உள்ளார். உயிர் உள்ளவை அற்றவை அனைத்திலும் நம் நன்மை கருதும் இறைவன் இருக்கிறார். ”

அன்றைய பாடத்தை அசைபோட்டவாறே அந்த பிரம்மச்சாரி பிச்சைக்கு சென்று கொண்டிருந்தான்.
திடீரென்று கனத்த குரல் ஒன்று, “ மதயானை வருகிறது. ஓடிப்போங்க…..”

அவன் கலங்கவில்லை. “அந்த மதயானையிலும் இறைவன்தானே இருக்கிறான். அவன் என்னை என்ன செய்யப் போகிறான்?” என்று எண்ணியபடியே மெதுவாக சென்றான்.

மீண்டும் யானைப்பாகனே ஓடிவந்து, “ ஓடிப்போயிடுங்க…. மதயானை வருகிறது” என்றவாறே ஓடினான்.

அப்போதும் சிஷ்யன் கலங்கவில்லை.
யானையும் வந்தது. கையில் அகப்பட்ட இவனை பிடித்து தூக்கி எறிந்தது. பலத்த காயத்துடன் உயிர் பிழைத்தான்.

குரு கேட்டார், “யானை வந்தபோது நீ ஏன் ஓடி தப்பிக்கவில்லை?”

நம்மாளு சொன்னான், “நீங்கதானே குருவே சொன்னீர்கள். அனைத்திலும் இறைவன் இருக்கிறான். அவன் நமக்கு நன்மையே செய்வான் என்று” முனகியபடியே சொன்னான்.

குரு சிரித்தபடியே சொன்னார், “ அட… அரைகுறை வேதாந்தியே…. எல்லாவற்றிலும் கடவுள் இருக்கிறார் என்பது உண்மைதான். யானையிடம் கடவுளை நம்பிய நீ அந்த யானைப்பாகன் உருவில் வந்த கடவுளின் பேச்சை ஏன் கேட்கவில்லை?”

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு,,