மனித குணங்கள்

ஆசிரமம் ஒன்றில் முற்றும் துறந்த சந்நியாசி ஒருவர் இருந்தார்.
அவருக்கு நான்கு இளம் சீடர்கள் இருந்தார்கள்.

முற்றும் துறந்தவருக்கு எதற்கு ஆசிரமம்? எதற்கு சீடர்கள்?
என்கிறீர்களா. அதுவும் சரிதான். அதை எல்லாம் நானும் கேட்டுக்
கொண்டிருந்தால் கதையை எப்படி நகர்த்துவது?

சில விஷயங்களைக் கேட்காமல் கருத்தை மட்டும் பார்ப்பதுதான்
நமக்கு நல்லது. ஆகவே கதைக்கு வருகிறேன்.

அசிரமத்தின் அன்றாடத் தேவைகளை, அந்த ஆசிரமத்தின் மேல்
மதிப்பு வைத்திருந்த - உங்கள் மொழியில் சொன்னால் அந்த
ஆசிரமத்தின்மேல் பிடிப்பு அல்லது காதல் கொண்டிருந்த உள்ளூர்
மக்கள் பார்த்துக் கொண்டார்கள்.

ஆசிரமம் செழிப்பாக இருந்தது. காலையிலும், மாலையிலும் சாமியார்,
மக்களை நல்வழிப்படுத்தும் முகமாக உரை நிகழ்த்துவார். கூட்டு
வழிபாடு செய்வார்.

ஒரு நாள், அந்த நான்கு சீடர்களில் மூன்று பேர்கள் சாமியாரிடம்
வந்து,” ஐயா நாங்கள் அருகிலிருக்கும் புண்ணிய நதிகளிலும், நீர்
நிலைகளிலும் தீர்த்தமாடிவிட்டுவர ஆசைப் படுகிறோம். அனுமதி
கொடுங்கள்” என்றார்கள்

”ஏன் நம்மூர் ஆற்றிற்கு என்னாயிற்று?” என்று கேட்டார்.

”அதில்தான் தினமும் நீராடிக்கொண்டிருக்கிறோமே! ஒரு மாறுதலுக்காக
மற்ற புண்ணிய நதிகளிலும் நீராடிவிட்டுவர விரும்புகிறோம்” என்றார்கள்.

“சென்று வாருங்கள்” என்றார்.

அவர்களில் ஒருவன்,”ஐயா நீங்களும் வர வேண்டும்!” என்றான்.

“இல்லை, நீங்கள் மட்டும் சென்று வாருங்கள்!” என்றார்

மற்ற இருவரும் இப்போது அவனுடன் சேர்ந்து வலியுறுத்தவே, சாமியார்
சுற்று முற்றும் பார்த்தார்.

அருகில் இருந்த பாகற்காய் கொடியில் நிறையக் காய்கள் காய்த்துத்
தொங்கிக் கொண்டிருந்தன.

அவற்றில் ஒன்றைப் பறித்து அவர்களிடம் கொடுத்தவர், இப்படிச் சொன்னார்:

“இந்தக்காயை நான் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீராடும்
இடங்களில் எல்லாம் இதையும் மூன்று முறைகள் நமச்சிவாயா என்று
சொல்லி நீரில் முக்கி எடுத்துக் கொண்டு வாருங்கள்”

அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். உள்ளூர் ஆசாமி ஒருவன் அவர்களுக்கு
வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான். இரண்டு நாட்கள்
பயணம் மேற்கொண்டு நான்கு நதிகளில் நீராடிவிட்டுத் திரும்பினார்கள்.

திரும்பி வந்தவுடன், சாமியாரை நெடுஞ்சான் கிடையாக விழுந்து
வணங்கினார்கள்.

சாமியார் கேட்டார்,”பாகற்காய் என்ன ஆயிற்று?”

“நீங்கள் சொன்னபடியே பாகற்காயையும் நீராட்டிக் கொண்டு வந்திருக்கிறோம்”

“இன்று அதைச் சமையலில் சேர்த்து விடுங்கள்” என்றார் அவர்.

அப்படியே செய்தார்கள்.

மதியம் சாப்பிடும்போது, சாமியார் கேட்டார்,” பாகற்காயில் ஏதாவது
மாறுதல் தெரிகிறதா?”

சீடர்கள் மூவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்,” இல்லை ஐயா,
எப்போதும் போல அது கசப்பாகத்தான் இருக்கிறது!”

இப்போது சாமியார், அவர்களுக்குப் புரியும்படியாக அழுத்தமான குரலில்
சொன்னார்.

“எத்தனை புண்ணிய நிதிகளில் முக்கி எடுத்தாலும் பாகற்காயின் குணம்
போகவில்லை அல்லவா? அதுபோலத்தான் எத்தனை புண்ணிய நதிகளில்
நீராடினாலும் அல்லது எத்தனை ஆலயங்களில் வழிபட்டாலும் மனிதனின்
இயற்கைக் குணம் மாறாது!”


ஆமாம் மனிதனின் இயற்கைக் குணம் என்றுமே மாறாது.

அதைப் பிறவிக் குணம் என்பார்கள்

அதை வலியுறுத்திச் சொல்லவே இந்தக் கதை.

மிளகாய் என்றுமே மிளகாய்தான்
மாங்காய் என்றுமே மாங்காய்தான்
புளியங்காய் என்றுமே புளியங்காய்தான்

எத்தனை இனிப்புப் போட்டுச் சமைத்தாலும் அவற்றின் இயற்கைத் தன்மை மாறாது!

அதுபோல கஞ்சன் என்றுமே கஞ்சன்தான். எத்தனை செல்வம் வந்தாலும்,
அந்தக் கஞ்சத்தன்மை மாறாது. அதுபோல காமுகன் என்றும் காமுகன்தான்.
எத்தனை பெண்களை அவனுக்குக் கட்டிவைத்தாலும் அவன் திருந்த
மாட்டான். உலகில் உள்ள அத்தனை அழகான பெண்களையும்
அவனுக்குக் கட்டி வைப்பதாகச் சொன்னாலும், தேவமங்கைகள் என்று
சொல்கிறார்களே, அவர்கள் கிடைப்பார்களா? என்றுதான் கேட்பான்.

அதுபோல கோபம், சோம்பேறித்தனம், பொறாமை, படபடப்பு, பிடிவாதம்
என்றுள்ள பல மனித குணங்கள் பிறவியிலேயே வருவது. அது என்றுமே
மாறாதது. மனிதன் செத்துச் சாம்பலாகும் வரை அவனுடனேயே இருப்பது.

எந்தக் கொம்பனாலும் அவற்றை மாற்ற முடியாது. அல்லது மாற்றிக் கொள்ள
முடியாது.

ஏன் அப்படி?

அதுதான் வாங்கி வந்த வரம்!

1 comment:

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...